அரசாங்கத்திலிருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதியுடன் தொடர்ந்து இணைந்து செயற்படவுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் முன்னோக்கி செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஜனநாயகம், இறைமை, திருடர்களைக் கண்டுபிடித்தல் உள்ளிட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் தமது ஆதரவை வழங்கத் தயார்.
எவ்வாறாயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகத்தை கட்டி எழுப்பவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த நான்காம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன், போது குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து, குறித்த அனைவரையும் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி வந்த நிலையில், நேற்றைய தினம் குறித்த அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.