பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆறு அமைச்சர்களும் கூட்டு எதிர்க்கட்சியில் இணையவுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
ஆறு அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “குறித்த அனைவரும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வார்கள்.
எதிர்வரும் 19ம் திகதி அவர்கள் தங்கள் பதவிகளை துறந்துவிட்டு பொதுஎதிரணியுடன் இணைந்துகொள்வார்கள்.
எவ்வாறாயினும், இவர்களை அரசாங்கத்தில் தொடர்ந்தும் தக்கவைத்து கொள்ள தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில் பிரேரணை மீது கடந்த 4ம் திகதி விவாதம் நடத்தப்பட்டது. இதன் போது பிரேரணைக்கு ஆதரவாக 76 பேர் வாக்களித்திருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆறு அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனால், தேசிய அரசாங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்கள் தொடர்ந்தும் அமைச்சு பதவிகளில் இருக்க கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
இதனையது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும் அரசாங்கத்தின் சகல பொறுப்புக்கள் பதவிகளிலிருந்தும் விலகுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் இந்த கருத்தினால் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.