Breaking
Sat. Nov 16th, 2024

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை, குச்சவெளி பிரதேசசபையில் ஆட்சியமைப்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும் குச்சவெளி பிரதேசசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள நிலையில், ஹக்கீமும் சம்பந்தனும் பேசிய விடயங்கள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குச்சவெளியில் ஆட்சியமைப்பது குறித்து சம்பந்தனுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட ஹக்கீம், அதற்கு முரண்பட்ட வகையில் செயற்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

இதேபோல் தான் வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை சேர்ந்து அமைக்கலாம் என கூட்டமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஹக்கீம், இறுதி நிமிடத்தில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் கூட்டு சேர்ந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையிலான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் பின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்ததாக அக்கட்சியின் கல்குடா பிரதேச பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஏறாவூர் நகரசபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியிருந்தது.

ஏறாவூர் நகரசபையில் தவிசாளர் தெரிவிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமாக நசீஸ் அஹமட் அணியிலிருந்து வாசித் அலியும்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா அணியிலிருந்து முஹம்மட் ஸாலி நழீம் ஆகியோர் தவிசாளர் தெரிவுக்கு பிரேரிக்கப்பட்டனர்.

பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் வாசித் அலிக்கு 9 உறுப்பினர்களும், நழீம் என்பவருக்கு 7 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் கூட்டமைப்பு வசாத் சாலிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதனாலேயே ஏறாவூர் நகரசபையில் முஸ்லிம் காங்கிரஸின் நசீஸ் அஹமட் அணியைச் சேர்ந்த வாசித் அலி தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து குச்சவெளி பிரதேசசபையில் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று கூட்டமைப்பின் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஹக்கீம் வழமையைப் போன்றே குத்துக்கரணம் அடித்துவிட்டார்.

கூட்டமைப்பையும், கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையையும் மீறி குச்சவெளி பிரதேசசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

இவ்வாறு ஹக்கீம் கூட்டமைப்புடன் பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *