(மு.நியாஸ் அகமது)
தேர்தலை சந்திக்க இருக்கும் அனைத்து கட்சிகளும், தங்கள் சாதனைகளை, செயல்படுத்திய திட்டங்களை நம்புகிறார்களோ, இல்லையோ சமூக ஊடகங்களையும், மக்கள் தொடர்பு நிறுவனங்களையும் மலைபோல் நம்புகிறார்கள்.
மக்கள் தொடர்பு நிறுவனங்கள் சொல்லும் பாணியில் தங்கள் பிரசார யுக்தியை வடிவமைத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு கட்டணமாக பல நூறு கோடி ரூபாயை கொடுக்க எந்த தயக்கமும் கட்சிகளிடம் இல்லை. இதை வளர்ச்சி, நவீனம் என்பதாக மட்டும் பார்க்க முடியாது.
காலத்திற்கு ஏற்றார் போல் கட்சிகள் தங்களை பிரசார யுக்தியை புதுப்பித்து கொள்கிறார்கள் என்று நமக்கு நாமே சப்பைக்கட்டுக்கட்டிக் கொள்ள முடியாது. இது ஆபத்தான போக்கு. அதாவது உள்ளே சீழ் படிந்த காலாவதியான பொருளாக இருந்தாலும், வெளியே இந்த நிறுவனங்கள் அழகான முலாம் பூசி தந்துவிடுகிறது.
சமூக வலைத்தளங்களும், கட்சிகளும்
கட்சிகளுக்கு பிரசார யுக்தியை வடிவமைத்து தரும் இந்த மக்கள் தொடர்பு நிறுவனங்களின் முதல் தேர்வாக இருப்பது சமூக வலைத்தளங்கள். சமூக வலைத்தளங்கள் தேர்தலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, தமிழக சூழலில் இதற்கு முன்னால், நமக்கு எந்த சான்றாதாரமும் இல்லை. சென்ற பாராளுமன்ற தேர்தலில் கூட பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களை வெற்றிகரமாக பயன்படுத்தி இருந்தாலும், அது தமிழகத்தில் செல்லுபடி ஆகவில்லை. ஆனாலும், தமிழக அரசியல் கட்சிகள் சமூகவலைத்தள விளம்பரங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம், தங்களுக்கு சாதகமான நேர்மறையான கருத்தை உருவாக்கி, அதன் மூலம் மக்களின் மனதை வென்று, ஆட்சியை பிடித்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.
பிரபல ஆங்கில நாளிதழ், அண்மையில் ஒரு கட்டுரையையும், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் ஒரு ஆடியோவையும் வெளியிட்டது. அதன் சாரம் இதுதான். அதாவது மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒரு பிராண்டிங் நிறுவனம், ஒரு வலைப்பதிவரிடம் பேசுகிறது.
“நாங்கள் தினமும், தற்போது இருக்கின்ற ஆட்சிக்கு எதிரான தகவல்கள் அடங்கிய கட்டுரையை தருவோம். அதை நீங்கள், அப்படியே உங்கள் வலைப்பூவில் பகிர்ந்தால் ரூ100, உங்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தால் ரூ. 200 தரப்படும். அது போல் நாங்கள் ஒரு நாளைக்கு மூன்று கட்டுரைகள் தருவோம்” என்பதாக நீள்கிறது அந்த உரையாடல். அந்த நிறுவனம் திமுகவிற்கு ஆதரவாக வேலைப்பார்ப்பதாக அந்த ஆங்கில நாளிதழ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இன்றைய தமிழக அரசியல், எந்த அளவிற்கு மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. அதாவது, இன்றைக்கு கட்சிகள் மக்கள் தளத்தில் இறங்கி வேலை பார்க்காமல், ஆட்சிக்கு எதிரான கட்டுரைகளை பிரபல வலைப்பதிவர்கள், முகநூல் பிரபலங்கள் கணக்கில் வெளியிடுவதன் மூலம், ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது மக்களை முட்டாளாக்கும் செயலன்றி வேறென்ன…?
‘இதில் என்ன தவறு இருக்கிறது, மக்களிடம் தகவலை கொண்டு போய் சேர்ப்பதில், இதுவும் ஒரு யுக்தி தானே…?’ என்கிற வாதத்தை ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு கட்சியின் கொள்கைகள் பிடித்து, அந்த கட்சிக்காக பிரசாரம் செய்வதென்பது வேறு. வெறும் பணத்திற்காக பிரசாரம் செய்வதென்பது வேறு. அங்கு உண்மை இருக்காது, பொய்யும் புரட்டும் மட்டும்தான் இருக்கும். இது சாமான்ய மக்களை முட்டாளாக்கும் செயல்.
என்ன தலைவர்கள், கட்சிகளின் ஆஸ்தான பேச்சாளர்கள் மேடையில் முழங்குகிறார்களே, அது மட்டும் என்ன உண்மையா, தேர்தல் பிரசாரம் என்பதே பொய்யால் கட்டமைக்கபட்டதுதானே? என்பதற்காக அந்த சாக்கடையில் இன்னொரு கிளை சாக்கடையும் சங்கமிக்க இசைவு தரமுடியாது. இது துர்நாற்றம், இன்னும் அதிகமாக வீசவே வழிவகை செய்யும்.
இது ஆரோக்கியமான அரசியலா ?
இன்றைய தேதிக்கு அனைத்து கட்சிகளும் தனியாக தகவல் தொழில்நுட்ப பிரிவை வைத்திருக்கிறார்கள். கட்சிகளுக்கென்று தனி வலைத்தளங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் முகநூலில், ட்விட்டரில் தனி பக்கம் வைத்திருக்கிறார்கள். தங்கள் சாதனைகளை, திட்டங்களை, அதில் பகிர்வதில் எந்த தவறும் இல்லை. அது போல் எதிர்கட்சிகளும், தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டலாம். ஆனால், அதை விடுத்து பணம் கொடுத்து தங்கள் கருத்தை பகிர சொல்வதிலிருந்தே தெரிகிறது, இந்த கட்சிகளுக்கு மக்கள் நலனை விட வேறு ஏதோ முக்கியமென்று.
தேர்தல் ஆணையம் எப்போது தன்னை மேம்படுத்தி கொள்ளப் போகிறது?
மக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதையே தடுக்க முடியாமல் தடுமாறும் தேர்தல் ஆணையம், இது போன்ற நவீன முறைகேடுகளை தடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது? இதுபோன்ற செயல்கள், ஏற்கெனவே துவண்டு போயிருக்கும் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையை இன்னும் வலுவிழக்க செய்யும். அது மோசமான ஒரு முட்டுச் சந்தில் போய்தான் நிறுத்தும். அதற்கு முன் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ள வேண்டும்.