மன்னார் – எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் முன்கெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வு பணி இன்று மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண், மன்னாரில் உள்ள பலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எமில் நகர் கிராமத்தைச் சேர்ந்த வீடு ஒன்றிற்கு விற்கப்பட்ட மண்ணில், சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் துண்டுகள் பல மீட்கப்பட்டுள்ளன.
எமில் நகர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குறித்த ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணை கடந்த சில தினங்களுக்கு முன் கொள்வனவு செய்துள்ளார்.
குறித்த மண் வீட்டிற்கு வெளியில் கொட்டப்பட்ட நிலையில் மண்ணை அள்ளி வீட்டு வளவினுள் கொண்டியுள்ளார்.
இதன்போது மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் பல வர தொடங்கிய நிலையில், வீட்டின் உரிமையாளர் சந்தேகம் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா தடவியல் நிபுனத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், எலும்புத்துண்டுகள் மனிதனுடையதா?அல்லது மிருகங்களினுடையதா? என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளன. இதன்போது மனிதனுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் மற்றும் பற்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இரவு 7.45 மணியளவில் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நாளை காலை அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.