(ஆர்.ரஸ்மின்)
புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான கமர்தீன் அப்துல் பாயிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், நகர சபையின் உப தலைவராக ஸ்ரீலங்கா பொமுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஆர்.ஏ. புஷ்பகுமார ஏகமனுதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நகர சபையின் தலைவராக கே.ஏ.பாயிஸை தெரிவு செய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜே.எம்ஆர்.பி.ஜெயசிங்க தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை புத்தளம் நகர சபையின் தலைவர், உப தலைவர் தெரிவுக்கான அமர்வு புத்தளம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கே.ஏ.பாயிஸ் மற்றும ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் சபையின் தலைவர் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டனர்.
இதனையடுத்து, வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும் எனக் ௯றப்பட்டதுடன், இரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் வேட்பாளரான பாயிஸூக்கு முதலாம் இலக்கமும், ஐக்கிய தேசியக் கட்சி சார் தலைவர் வேட்பாளரான அலிசப்ரி ரஹீமுக்கு இரண்டாம் இலக்கமும் வழங்கப்பட்டது.
குறித்த இரகசிய வாக்கெடுப்பு 3.10 க்கு வாக்கெடுப்பு ஆரம்பமானதுடன், 3.25 வரை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உனுப்பினரான எம்.ரி.நூருல் அமீன், இந்த வாக்கெடுப்பில் இருந்து தவிர்ந்து கொள்வதாக சபையில் அறிவித்தார்.
எனினும், ஏனைய உறுப்பினர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
குறித்த இரகசிய வாக்கெடுப்பு நிறைவனைந்ததும், இரண்டு கட்சி சார் தலைவர் வேட்பாளர்களான கே.ஏ.பாயிஸ் மற்றும் அலிசப்ரி ஆகிய இருவரின் முன்னிலையில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஏ.பாயிஸூக்கு 11 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு 7 வாக்குகளும் கிடைத்தது.
இதன்படி, 4 மேலதிக வாக்குகளால் கே.ஏ.பாயிஸ் புத்தளம் நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜே.எம்ஆர்.பி.ஜெயசிங்க உத்தியோகபூர்வமாக சபையில் அறிவித்தார்.
இதனையடுத்து, புத்தளம் நகர சபையின் உப தலைவருக்கான தேர்வு இடம்பெற்றது. இதன்போது, உப தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஆர்.ஏ. புஷ்பகுமாரவை நிமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் எஸ்.எல்.ரபீக் முன்மொழிந்தார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான கமல்கே விஜயதாசவை உக தலைவராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான அலிசப்ரி ரஹீம் சபையில் முன்மொழிந்தார்.
உப தலைவர் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பிலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினரான எம்.ரி.நூருல் அமீன், இந்த வாக்கெடுப்பில் இருந்து தவிர்ந்துகொள்வதாக மீண்டும் சபைக்கு தெரிவித்ததுடன், ஏனைய உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் உப தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.ஏ.புஷ்பகுமாரவுக்கு 10 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட கமல்கே விஜயதாசவுக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதன்படி, 2 மேலதிக வாக்குகளினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் உப தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.ஏ.புஷ்பகுமார புத்தளம் நகர சபையின் உப தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் நியமிப்பதற்கான சபை அமர்வு நடைபெற்ற புத்தளம் பொது நூலக வளாகத்தில் பெருமளவு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அத்துடன், புத்தளம் பொது நூலகம் மற்றும் சிறுவர் பூங்கா என்பனவற்றுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. கட்சியின் ஆதரவாளர்கள் புத்தளம் பொது நூலகத்திற்கு அருகில் ௯டியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
புத்தளம் நகர சபையின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த கே.ஏ.பாயிஸ், தெரிவுசெய்யப்பட்டுள்ளமையை அடுத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் புத்தளம் நகரில் பட்டாசு கொளுத்தி சந்தோஷத்தை வெளிப்படுத்தியதுடன், வாகன பேரணியில் ஊர்வளமாகவும் சென்றனர்.