Breaking
Sun. Nov 24th, 2024

(சுஐப் எம்.காசிம்)

இலங்கையில் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்புக்களை, பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கைத்தொழில், வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பங்களாதேஷ் நாட்டின் சுதந்திரதின நிகழ்வுகள் நேற்று மாலை (26) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பங்களாதேஷ் நாட்டின் 47 வது சுதந்திர மற்றும் தேசியத் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பாக, அவர்களின் பிரதிநிதியாக கலந்துகொள்வதையிட்டு பெருமைகொள்கின்றேன்.

அத்துடன் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷேக் ஹசீனா, அந்நாட்டின் பிரதமர், பங்களாதேஷ் நாட்டு மக்கள், இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் அப்துல் ஹமீத் ஆகியோருக்கு ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையும், பங்களாதேசும் நீண்டகால நட்பு நாடுகள். கலாசார, சமய அடிப்படையில் இவ்விரு நாட்டு மக்களுக்கும் இடையிலே நெருங்கிய தொடர்பும், உறவும் இருந்து வருகின்றது. சமூக அரசியல், பொருளாதாரம், கலாசார ரீதியில் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம். வங்காள விரிகுடா பிராந்தியத்தில் இரண்டு நாடுகளும் நெருங்கிய அயல்நாட்டு நண்பர்கள்.
கடந்த சில வருடங்களாக இரண்டு நாடுகளுக்குமிடையிலான உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவின் பரஸ்பர நட்பு விசயங்கள் காரணமாக இரண்டு நாடுகளுக்குமிடையிலான கூட்டு உறவு பலமடைந்து இருப்பதுடன், வர்த்தக, முதலீடு, கல்வி, விளையாட்டு மற்றும் கலாசார விருத்தி ஆகியவை வளர்ச்சியடைந்தும், விரிவடைந்தும் இருக்கின்றன.

இலங்கையும், பங்களாதேசும் பலதரப்பு மற்றும் பிராந்திய ரீதியிலான உறவுகளை வளர்த்து வருகின்றது. அதாவது ஐக்கிய நாடுகள் (UN), சார்க் (SAARC), பிம்ஸ்டெக் (BIMSTEC), ஏசிடி (ACD), அயோரா (IORA) ஆகியவற்றுடன் பொதுவான அபிலாஷைகளை மையமாகக் கொண்டு நெருங்கிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன், தத்தமது நாடுகளின் மக்களின் அடைவை நோக்கிய பயணத்தில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது.

நீண்டகால பிரச்சினைகளினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியில் மீளெழும்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான கடினமான காலகட்டங்களில் இலங்கையின் ஒருமைப்பாடு, இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம் பங்களாதேஷ் எமக்கு உதவி இருப்பதை நாம் நன்றியுணர்வுடன் நினைவு கூறுகின்றோம்.

எமது நட்பும், ஒருமைப்பாடுமே இரு நாடுகளின் நீடித்த நட்புக்கு வழி வகுக்கின்றது. பங்களாதேஷ் நாடு குறைந்த மத்திய வருமான நாடு எனும் தரத்திலிருந்து படிப்படியாக விடுபட்டு, சிறியளவிலான அதிகரிப்பை எட்டி வருவதையிட்டு நாங்கள் இதயபூர்வமான மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றோம்.

இலங்கையானது உலக மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒரு நாடாக மாறி வருகின்றது. உலகளாவிய முதலீட்டாளர்கள் கப்பல் துறை, மீன்வளத்துறை, உல்லாசத் துறை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

இவ்வாறான துறைகளில் கிடைக்கும் பிரமாண்டமான வாய்ப்புக்களை பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று, இந்த பொன்னான தருணத்தில் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *