Breaking
Sun. Nov 24th, 2024

வை எல் எஸ் ஹமீட்

ஏப்ரல் 2ம் திகதி கல்முனை மாநகரசபைக்கான மேயர் தெரிவு இடம்பெற இருக்கின்றது. கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் சூன்யமாகவே இருக்கின்றது. வாக்களித்த மக்களின் கைகளில் தற்போது எதுவுமில்லை. முடிவுகள் கட்சிகளிடமே இருக்கின்றன.

கட்சிகளோ, நாங்கள் அந்தக்கட்சியுடன் சேரமுடியாது; இந்தக்கட்சியுடன் சேரமுடியாது; என கண்ணாமூச்சி விளையாடுகின்றன. உங்களின் கட்சி விளையாட்டுகளுக்கு கல்முனையின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர்கள்.

தமிழ்த்தரப்புடன் கூட்டுச்சேர்வது தொடர்பாகவும் கதைகள் அடிபடுகின்றன. உண்மை, பொய் தெரியவில்லை. தமிழர்கள் சகோதர சமூகம். தேவையான இடங்களில் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதில் கோட்பாட்டுரீதியாக பிழைகாண முடியாது. ஆனால் அந்தக்கோட்பாடு கல்முனைக்கு எந்தக்காரணம் கொண்டும் பொருந்தாது.

இதுதொடர்பாக நிறைய எழுதியிருக்கின்றேன். மீண்டும் அதற்குள் செல்லவிரும்பவில்லை. கல்முனையில் தமிழர்களுடன் இணைவதை நாம் வெறுக்கவில்லை. ஆனால் அவ்வாறு இணைந்தால் கல்முனை முஸ்லிம்கள் முகம்கொடுக்கப்போகின்ற பிரச்சினையை உணர்ந்தவர்கள் நாம். அதனால்தான் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம்.

கிழக்குமாகாணசபையில் கூட்டாட்சி அமைத்தீர்கள். முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றீர்கள். ஆயினும் கல்முனையில் ஒரு வீதிக்கு பெயர்மாற்றுவதைக்கூட அந்தக்கூட்டு அனுமதிக்கவில்லை. கல்முனையில் கூட்டுச்சேர்ந்தால் …….? அதன் விளைவுகள் மனத்திரையில் நிழலாய் ஓடுகின்றது. கல்முனை மார்க்கட்டும் பசாரும் கண்முன்னே விரிகின்றன.

கல்முனையின் இந்த இக்காட்டான நிலைக்குக் காரணம் சாய்ந்தமருது சுயேச்சை. தமிழ்த்தரப்புடன் கூட்டுச்சேர்ந்தால் கல்முனை நாலாகப்பிரிப்பு சாத்தியப்படப் போவதில்லை. நாலாகப் பிரிக்காமல் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சிசபையும் சாத்தியப்படப் போவதில்லை.

சாய்ந்தமருது சுயேச்சை கல்முனைக்கு மாத்திரம் பாதிப்பல்ல. சாய்ந்தமருதின் கோரிக்கையின் சாத்தியத்தை பின்தள்ளுகின்ற ஒரு பிழையான முடிவு என்பதை இன்ஷாஅல்லா காலம் நிரூபிக்கும்.

சாய்ந்தமருது சுயேச்சைக்குழு போட முடிவெடுத்தபோது, அதன் தாக்கங்களிலிருந்து கல்முனையைப் பாதுகாக்க ஏனைய மூன்று ஊர்களும் இணைந்து ஒரு சுயேச்சைக் குழுவை இறக்கியிருக்க வேண்டும். இந்த விடயத்தில் கல்முனைக்குடி பள்ளிவாசல் முன்னெடுப்புகளைச் செய்வதிலிருந்து தவறிவிட்டது. அவ்வாறு போட்டியிட்டிருந்தால் இன்று நிம்மதியாக மாநகரசபை ஆட்சிசெய்திருக்கலாம்.
அல்லது

சாய்ந்தமருது சுயேச்சைக்கு வழிவிட்டு ஒதுங்கிய கட்சிகள் மனச்சாட்சி இருந்திருந்தால் மொத்த கல்முனை மாநகரசபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஒதுங்கி ஒரு கட்சிக்கு வழிவிட்டிந்தாலும் இன்றைய நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருக்காது.

மரத்தால் விழுந்தவனை மாடு மிதிப்பதுபோல் கல்முனையை இக்கட்டுக்குள் தள்ளுகின்ற சாய்ந்தமருதுப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவிட்டு அப்போராட்டத்தினால் ஏற்கனவே இக்கட்டுக்குள் தள்ளப்பட்ட கல்முனையின் எஞ்சிய ஊர்களை மேலும் கூறுபோட்டார்கள்.

கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினேன்; “ இவர்கள் வந்து கூறுபோட்டு அரசியல் வியாபாரத்தை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள் அடுத்த தேர்தலுக்கு புதிய கதையுடன் வரும்வரை. இக்கட்டுக்குள் மாட்டப்போவது கல்முனை மாநகரும் அதன் மக்களும்தான்” என்று.

அது இன்று நடக்க ஆரம்பித்து இருக்கின்றது. இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற அனைவரும் கல்முனை மாநகரசபை எல்லைக்குள் அம்மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அந்தக் கல்முனை மாநகரைக் காப்பதற்கு அவர்கள் ஒன்றுபட முடியாதாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லையாம்.

கல்முனை மாநகரசபை எல்லைக்குள் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுபட வேண்டுமா? இல்லையா என்பதை கொழும்பில் இருந்து அதன் தலைவர்கள் என்பவர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமாம்.

சரி பறவாயில்லை. தீர்மானியுங்கள்; என்றால் ஒற்றுமைப்படுவதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லையாம். காரணம் அவர்கள் வெவ்வேறு கட்சியாம். அவர்களது கட்சி நலன் முக்கியமாம். சிலவேளை முஸ்லிம்களிடமிருந்து மொத்த கல்முனையையே கபளீகரம் செய்யத்துடிக்கின்ற தமிழ்த்தரப்புடன் கூட்டாம்; என்று வேறு செய்திகள் காற்றுவாக்கில்.

வேண்டுகோள்
——————-
எனவே, கல்முனையில் ஆசனங்கள் பெற்றிருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் உங்கள் கட்சிகளின் வரட்டுக் கௌரவங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கல்முனையில் அங்கத்தவர்கள் சுயமாக முடிவெடுக்க அனுமதி கொடுங்கள்.

பள்ளவாசல் நிர்வாகிகளே!
———————————
தேர்தலுக்குமுன் ஒரு சுயேச்சைக்குழுவிற்கான முயற்சிகளை முன்னெடுக்கத் தவறிவிட்டீர்கள். மூன்று ஊர்ப்பள்ளிவாசல் பிரதிநிகள் ஒரு இடத்தில்கூடி இவர்களை அழைத்துப்பேசி மேயர், பிரதிமேயர் பிரச்சினையைத் தீர்த்துவையுங்கள்.

சிலவேளை கட்சிகள் அவ்வாறு அங்கத்தவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கத்தவறினால் நீங்கள் சுயமாக அவர்களை அழையுங்கள். வாக்களித்தவர்கள் மக்கள். அவர்களை இக்கட்டான நிலையில் கைவிட்டுவிட்டு தலைமைத்துவம் என்ன சொல்கிறது; என்று இவர்கள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அனுமதிக்க முடியாது.

கட்சியின் அதிகாரம் மக்களின் அதிகாரத்தை மேவமுடியாது. இதுவிடயத்தில் மூன்று ஊர்களிலுமுள்ள பொதுஅமைப்புகள் ஒன்றுபடுங்கள். குறிப்பாக, கல்முனை வர்த்தக சங்கம், மார்க்கட் வர்த்தக சங்கம் இதில் அதீத அக்கறை எடுங்கள். ஏனெனில் காரியம் பிழைத்தால் முதலாவது பாதிக்கப்படப்போவது நீங்கள்தான்.

இந்த முயற்சியில் சாய்ந்தமருதும் நிபந்தனையில்லாமல் இணைய விரும்பினால் தாராளமாக இணைத்துக் கொள்ளுங்கள்.

கைக்குள் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கலையாதீர்கள்.

நீங்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகள் அங்கே இருக்கும்போது கட்சிகள் என்ன முடிவை எடுக்குமென்று காலத்தைக் கடத்தி கல்முனையின் எதிர்காலத்தைப் பறிகொடுத்துவிடாதீர்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *