Breaking
Sun. Nov 24th, 2024
(பிறவ்ஸ்)
முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

2017,10, 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் முஸ்லிம்கள் சார்பில் கலந்துகொண்டனர். இவர்களுடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித வணிகசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் தற்போது கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபருமான சுனில் கன்னங்கர, நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது முஸ்லிம்கள் மத்தியில் நீண்டகாலமாக தீர்வுகாணப்படாமல் இருக்கின்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதில் சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வும், சில பிரச்சினைகளுக்கு தொடர்ந்து மேலதிக சந்திப்புகளை மேற்கொண்டு தீர்வுகளை எட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டன.

நுரைச்சோலை வீட்டுத்திட்டம்

அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 500 சுனாமி வீடுகளை விரைவாக பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வீட்டுத்திட்டம் பல வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் கிடந்தமையினால், அவை பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால், அவற்றைத் திருத்துவதற்கு செம்பிறைச் சங்கம் உதவிசெய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், வீட்டை மீண்டும் புனரமைப்பதற்கு அதிககாலம் எடுக்கும் என்பதால் உடனடியாக பயனாளிகளை தெரிவுசெய்து, வீடுகளை கையளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். அக்கரைப்பற்றில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கியபின்னர், எஞ்சிய வீடுகளை ஏனைய பகுதிகளிலுள்ள வீடற்றவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உஹண, மகாஓயா, பதியத்தாலவ  போன்ற பிரதேசங்களிலுள்ள சிங்கள மக்களை தெரிவுசெய்து அவர்களுக்கு வீடுகளை கொடுப்போம் என்று அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார். இது அந்தளவு பெரிய வீட்டுத்திட்டம் இல்லை. சிங்கள மக்களையும் உள்வாங்கவேண்டும் என்ற காரணத்தினால், தமண பிரசேத்திலுள்ள வறிய சிங்கள மக்களை தெரிவுசெய்து கொடுங்கள் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையினால் சிலரின் வசிப்பிடங்கள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வேண்டுமானால் அவர்களுக்கு வீடுகளை கொடுக்கமுடியும் என்று ரவூப் ஹக்கீம் யோசனையொன்றை முன்வைத்தார். குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதனால், உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாது என்பதை காரணம்காட்டி அரசாங்க அதிபர் அதிற்கு உடன்படாமல் இருந்தார்.

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தில் பற்றைகள் வளர்ந்துள்ளதால் அவற்றை துப்பரவாக்குவதற்கு நிதியுதவி வழங்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் அரசாங்க அதிபர் கோரினார். தனது அமைச்சு மூலம் அம்பாறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பயன்படாத நிதி இருந்தால், அவற்றை தாரளமாக பயன்படுத்த முடியுமென ரவூப் ஹக்கீம் பதிலளித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி, வேண்டாம் அதற்கு நான் பணம் தருகிறேன் என்று ஒத்துக்கொண்டார்.

இவ்வீட்டுத்திட்டத்தில் 303 வீடுகள் முஸ்லிம்களுக்கும் எஞ்சியுள்ள 197 வீடுகளை தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. எனினும், சவூதியினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டுத்திட்டத்தை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் ஒருசில அரசியல்வாதிகளுக்கு உடன்பாடில்லாத காரணத்தை அசாத் சாலி சுட்டிக்காட்டினார். இதில் உச்சநீதிமன்‌ற தீர்ப்பு இருக்கின்ற காரணத்தினால், சட்டமா அதிபரின் ஆலோசனையும் கோரப்பட்டிருக்கிறது.

மூவினத்துக்கும் வீடுகளை பகிர்ந்தளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார். ஏற்பாடுகள் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்காமல், உடனடியாக வீடுகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள வீடற்றவர்களை கணக்கிட்டு, அவற்றில் மாவட்ட விகித அடிப்படையில் வீடுகளை வழங்கவேண்டும் என்பதுதான் தீர்மானம். சட்டத்தின் பிரகாரம் வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு ஏற்கனவே ஒரு தீர்மானம் இருக்கிறது. இந்நிலையில், மாவட்ட விகித அடிப்படையில் வீடுகளை பகிர்ந்தளிக்கும்போது பிரச்சினைகள் ஏற்படும்.

இது சுனாமி வீட்டுத்திட்டம் என்பதனால், அதில் அதிகமான வீடுகள் முஸ்லிம்களுக்கே வழங்கப்படவேண்டும். இவ்வீட்டுத்திட்டம் அக்கரைப்பற்று நகரசபைக்குள் வருகின்ற காரணத்தினால் வேறு இனத்தவர்களை குடியமர்த்துவதில் கவனம் செலுத்தவேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தில் பாடசாலை, வைத்தியசாலை போன்றவற்றை நிர்மாணிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சவூதியிலுள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் திருத்த வேலைகளுக்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியுமென றிஷாத் பதியுதீன் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இதன்பிரகாரம் ஜனவரி மாதத்தில் நுரைச்சோலை வீடுகளை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அதன்பின்னர் சவூதியிலுள்ள நிறுவனத்தின் நிதியைப் பெற்று அவற்றை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

தம்புள்ளை பள்ளிவாசல்

மைத்திரியை ஆட்சிக்கு கொண்டுவரும் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பேசுபொருளாக இருந்த தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை, இந்த ஆட்சியிலும் இழுத்தடிக்காமல் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், அசாத் சாலி ஆகிய மூவரும் ஜனாதிபதியிடம் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தனர்.

தம்புள்ளை பள்ளிவாசல் புனிதபூமி பிரதேசத்துக்குள் உள்ளடங்குவதாக கூறப்படுவதால், அதை பிறிதொரு இடத்தில் அமைப்பதற்கு 40 பேர்ச் காணி அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 28 பேர்ச் காணியை தனவந்தர் ஒருவர் கொள்வனவு செய்து வக்பு செய்துள்ளார். ஆனால், அந்த இடத்தைக் கொடுக்காமல், தம்புள்ளை சந்தைக்கு அருகில் 20 பேர்ச் காணியை வழங்குவதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இணங்கியிருந்தார். பின்னர் வந்த எதிர்ப்புகளினால் அதுவும் கைவிடப்பட்டது.

பள்ளிவாசலை சுற்றிவர போதியளவு முஸ்லிம் குடியேற்றங்கள் இல்லை என்பதை காரணம்காட்டி பெளத்த விகாராதிபதிகள் தள்புள்ளையில் பள்ளிவாசல் அமைப்பதற்கு தடையாக இருக்கின்றனர். குறித்த பள்ளிவாசலை தம்புள்ளைக்கு வெளியில் கொண்டுசெல்லுமாறு அவர்கள் வலியுறுத்துவதாக அதிகாரிகளினால் கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம், 1960ஆம் ஆண்டு முதல் தம்புள்ளையில் பள்ளிவாசல் இருந்து வருகிறது. இந்தப் பள்ளிவாசல் இங்கிருந்து அகற்றப்பட்டால் நீண்ட தூரத்திலுள்ள கெக்கிராவ, மடாட்டுகம பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலுக்குத்தான் முஸ்லிம்கள் செல்லவேண்டும். அது நடைமுறைச் சாத்தியமில்லாத விடயம் என்பதை சுட்டிக்காட்டினார்.

பள்ளிவாசல் புனிதபூமி பிரதேசத்துக்குள் வருகின்ற காரணத்தினால்தான் நாங்கள் உதவிசெய்ய முன்வந்திருக்கிறோம். அதற்காக பள்ளிவாசலை தூர பிரதேசங்களில் அமைக்க முடியாது. புனிதபூமிக்கு வெளியில், தம்புள்ளை பிரதேசத்தில்தான் இந்தப் பள்ளிவாசல் அமைக்கப்படவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 40 பேர்ச் காணி புனிதபூமிக்கு வெளியில், தம்புள்ளைக்கு உள்ளே அமைந்திருப்பதால் அங்குதான் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்று கூட்டாக வலியுறுத்தப்பட்டது. இதனை வீணாக எதிர்த்துக் கொண்டிருப்பதற்கு இடமளிக்காமல், குறித்த இடத்தில் பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கோரினார்கள்.

அங்கு வந்திருந்த நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு தம்புள்ளை பள்ளி விடயத்தில் போதியளவு தெளிவில்லாத நிலையே காணப்பட்டது. பள்ளிவாசல் அமையப்பெறும் காணி விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவு எட்டப்படாத நிலையே காணப்படுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட எல்லா அரசியல்வாதிகளுடனும் பேசி, இதற்கான தீர்வை எட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கிரண்ட்பாஸ் பள்ளிவாசல்

கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினையின் பின்னணியை மூவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு விளக்கினார்கள். பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த போதி மரத்தை அகற்றிவிட்டு பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. பின்னர் தினேஷ் குணவர்தனவுடன் முஸ்லிம் அமைச்சர்கள் பெளத்த விவகார அமைச்சில் கூடி இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது, அருகில் புதியதொரு பள்ளியை நிர்மாணிக்க இணக்கம்காணப்பட்டது.

இப்போது பழைய இடத்திலும் பள்ளிவாசல் இல்லை, புதிய இடத்திலும் பள்ளிவாசல் இல்லை. இதுவும் உங்களுடைய தேர்தல் காலங்களில் பேசப்பட்ட விவகாரம். தற்போது மறக்கடிக்கடிக்கப்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் வேண்டிநின்றார்.

விரைந்து இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குங்கள். இதைத் தீர்ப்பதற்கு ஏதாவது உதவிகள் தேவைப்படின் என்னை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி, நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காணிப்பிரச்சினைகள்

நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள முல்லைத்தீவு மற்றும் வில்பத்து காணிப்பிரச்சினைகள் தொடர்பாக றிஷாத் பதியுதீன் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.  இதுதொடர்பில் மேலதிக சந்திப்புகளை மேற்கொண்டு அதற்கான தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அடுத்து, அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிரும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு விளங்கப்படுத்தினார். வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியில் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட உயரதிகாரிகளை அழைத்துக்கொண்டு காணிப்பிரச்சினை காணப்படும் இடங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டு பிரச்சினைகளை நேரில் அவதானித்தோம்.

நீங்கள் மன்னிக்கவேண்டும், உங்களது அமைச்சின் கீழ் வருகின்ற வன பாதுகாப்பு திணைக்களமும், வன ஜீவராசிகள் திணைக்களமும்தான் இப்பிரச்சினைக்கு முட்டுக்கடையாக இருக்கிறது. யானை வழிப்பாதை, வன பாதுகாப்பு பிரதேசம் என்று பல சாக்குப்போக்குளை சொல்லி, இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அவர்கள் விருப்பமில்லாமல் இருக்கின்றனர். இறுதியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலும் எனக்கு திருப்தியில்லை. எனவே, நீங்கள்தான் இப்பிரச்சினையை தீர்த்து தரவேண்டும் என்று ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் காட்டமாக தெரிவித்தார்.

இந்த திணைக்களங்களினால் உங்களுக்கு மாத்திரமல்ல எனக்கும் பிரச்சினை இருக்கிறது. பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களை விடுவிப்பதில் அவர்கள் தடையாக இருக்கின்றனர். நாடுமுழுவதும் இவர்களின் பிரச்சினை இருக்கிறது. எந்த இடங்களையும் விடுவிப்பதற்கு அவர்கள் விடுகிறார்கள் இல்லை என்று ஜனாதிபதி பதிலளித்தார். நீங்கள் அப்படிச் சொல்லமுடியாது. உங்களது அமைச்சின் கீழுள்ள திணைக்களின் பிரச்சினைக்கு நீங்கள்தான் தீர்வு வழங்கவேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கூறினார்.

அடுத்து, வட்டமடு காணப்பிரச்சினை தொடர்பில் ரவூப் ஹக்கீம் விளக்கமளித்தார். வட்டமடுவில் நீண்டகாலமாக விவசாயம் செய்துவந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்‌னரும் அக்காணியில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அது முற்றாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், மாரிப் போகத்திலாவது அங்கு விவசாயம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும்.

இதுதவிர, மேய்ச்சல்தரை பிரச்சினையும் அங்கு இருக்கிறது. அதை நாங்கள் தமிழர்களுடன் பேசி தீர்த்துக்கொள்வோம். ஆனால், இப்பிரச்சினைக்கு தீர்வே இல்லையென்ற வகையில் அதிகாரிகள் செயற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதன்மூலம் மக்களையும் திருப்திப்படுத்தவும் முடியாது. எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வுகள் இருக்கின்‌றன. வட்டமடு பிரச்சினைக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு தீர்வை வழங்கவேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கோரினார்.

இதற்கு தனியொரு கலந்துரையாடலை மேற்கொண்டு அதற்கான தீர்வுகள் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் என ஜனாதிபதி இதற்கு பதிலளித்தார்.

இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலை காணிகள் தொடர்பான அறிக்கையை அசாத் சாலி ஜனாதிபதியிடம் சர்ப்பித்தார். நீதிமன்‌றத்தில் வழக்கு காணப்படும் நிலையில் குறித்த காணிகள் சில இன்னும் வழங்கப்படாதுள்ளது. அப்பிரச்சினையை தீர்த்துவைக்குமாறு குறித்த அறிக்கையை ஜனாதிபதி அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தார்.

மாணிக்கமடு பிரச்சினை

இறக்காமம், மாணிக்கமடுவிலுள்ள மாயக்கல்லிமலையில் அடாத்தாக பெளத்த மடாலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. தீகவாபி விகாரைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு தங்குமிடம் அமைப்பதில், இரு விகாரதிபதிகளுக்கு இடையில் காணப்படும் போட்டிதான் இதற்கு காரணம் என்று அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இதற்காக அப்பாவி மக்கள் மத்தியில் இனமுறுகலை ஏற்படுத்தவேண்டாம். சிங்களவர்களே இல்லாத இடத்தில் எதற்கு பெளத்த மடாலயம் அமைக்கவேண்டும். தொல்பொருளியில் திணைக்களத்தினால் பாதுகாப்பு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் எப்படி புதிய கட்டிடங்களை கட்டமுடியும். சித்துல்பகுவ போன்‌ற பட இடங்களில் இப்படியான பிரச்சினை வந்தபோது, அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடமளிக்காத தொல்பொருளியில் திணைக்களம் இங்கு மட்டும் அனுமதியளிப்பது என்ன வகையில் நியாயம் என்று ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார்.

ஓரிடத்தில் பழைய தொல்பொருள் விடயங்கள் இருந்தால் அதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. அதனைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். அதைவிடுத்து அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தொல்பொருளியில் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்படக்கூடாது. வெளியிலிருந்து படையெடுத்து கிளம்பி வருகின்றவர்கள்தான் இங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். இதற்கு இடமளிக்காமல் உறுதியான சில முடிவுகளுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

மெளலவி ஆசிரியர் நியமனம்

மெளலவி ஆசிரியர் நிமயனங்கள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டது. 300 வெற்றிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளநிலையில் தற்போது 170 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களில் இதற்கு நேரடியாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.

மெளலவி ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வின்போது உயர்தரத்தில் சித்தி மற்றும் அல்ஆலிம் சான்றிதழ் என்பன எதிர்பார்க்கப்பட்டன. அப்படியில்லா பட்சத்தில், மாற்றுவழிகளை கையாண்டு ஆட்களை தெரிவுசெய்து 174 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மாகாண கொள்கை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவேணடும் என்பதினால், ஒருசில மாகாணசபைகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. அந்த மாகாணசபைகள் இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம், அரபு போன்றவற்றிலுள்ள பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றன.

தமிழ்மூல பாடசாலைகளில் நிலவும் வெற்‌றிடங்கள் மற்றும் மெளலவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு உங்களது தலைமையில், மாகாண கல்வி அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சரை அழைத்து திறந்த கலந்துரையாடலொன்றை நடாத்துமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் ஆலோசனை கூறினார்.

அவர்களை விரைவில் அழைத்துவந்து இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம். அதற்குமுன் தற்போது ஆயத்தமாகவுள்ள மெளலவி ஆசிரியர் நியமனங்களை விரைவில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

பாத்தியா மாவத்தை பள்ளிவாசல்

தெஹிவளை, பாத்தியா மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் பிரச்சினைகள் தொடர்பாக அசாத் சாலி விளக்கமளித்தார். குறித்த பள்ளிவாசல் கட்டிடம் சட்டவிரோதமானது என்றும் அதனை அகற்றுமாறும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அடிக்கடி அனுப்பிவருகிறது. நீண்டகாலமாக பாவிக்கப்பட்டு வரும் பள்ளிவாசலுக்கு இப்பிரச்சினை தொடர்ந்து வண்ணமுள்ளது.

ஸ்ரீவிகார மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் என்று நினைத்துக்கொண்டு  நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் அதற்கு விளக்கமளித்துக்கொண்டிருந்தனர். அதுவேறு பள்ளிவாசல், இது வேறு பள்ளிவாசல் என பள்ளிவாசலின் உண்மையான பிரச்சினையை ரவூப் ஹக்கீம் விளங்கப்படுத்தினார். இதுகுறித்து கலந்துரையாடிய பின்னர் தீர்வுகளை வழங்குவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் பெளத்த சாசன அமைச்சின் கீழேயே பள்ளிவாசல்கள் நிர்வகிக்கப்பட்டு வந்தன. தற்போது முஸ்லிம் கலாசார அமைச்சு தனியான இருக்கின்ற காரணத்தினால், பெளத்த சாசன அமைச்சின் கீழிருக்கின்ற சட்டத்தை மீளப்பெறுமாறு அசாத் சாலி வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பில் பெளத்த சாசன அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஜனாதிபதி அதற்கு பதிலளித்தார்.

முஸ்லிம்கள் மத்தியிலுள்ள முக்கிய பிரச்சினைகள் தற்போது ஜனாதிக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதால் அப்பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து வைத்துள்ளார். ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இப்பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தரவை காரணம்காட்டி, அதிகாரிகளை அடிக்கடி நிர்ப்பந்தித்து தீர்வை பெறவேண்டியது இவர்களின் தலையாக கடமையாகும்.

(நன்றி: விடிவௌ்ளி 29.09.2017)
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *