Breaking
Sun. Nov 24th, 2024
(பர்வீன்)
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின்  சில பிரதேசங்களில்  அண்மையில் நடந்த இனவாத வன்செயல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் புதன்கிழமை (21) அமைச்சர் கிரியல்ல தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கண்டிமாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சராக ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம்,பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், ஆனந்த அழுத்கமகே, மயந்த திஸாநாயக்க, மாகாண சபை உறுப்பினர்களான ஹிதாயத் சத்தார், லாபிர் ஹாஜியார்,  ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், பள்ளிவாசல்களின் நிருவாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து எமது அரச தலைவர்களுடன் கலந்துரையிடலில் ஈடுபட்டு வருகிறோம். இவற்றுக்கு நாங்கள் நிரந்தரமான தீர்வை காண வேண்டும். அவ்வப்போது ஏற்படும் இவ்வாறான சம்பவங்களால் நமது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. தற்போது ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தொடரை பார்க்கும் பொழுது,வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இங்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை தொடர்பில் அங்கு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்

அண்மையில் நடந்து முடிந்துள்ள சம்பவங்களை உற்றுநோக்கும் பொழுது குறிப்பாக நீதியையும்,அமைதியையும் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பை சுமந்துள்ள பொலிஸார் தங்களது கடமையில் தவறிழைத்து உள்ளதை இட்டு நாம் மிகவும் ஆழமாக தேடிப்பார்க்க வேண்டும்.

 தெல்தெனியவிலிருந்து அலவத்துகொட,பூஜாபிட்டிய, கட்டுகஸ்தோட்டை  ஆகிய பொலிஸ் நிலையங்களில் திருப்தியடையக்கூடிய வகையில்,இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு கிடைப்பத்தில்லை என்பதே எங்களது நிலைப்பாடாகும்.இது நாங்கள் காண்கின்ற விஷயம் இதனோடு நீங்கள் உடன்படுவீர்கள் என நினைக்கிறோம்.

இது சம்பந்தமாக பொலிஸ் மாஅதிபரோடு கதைத்தோம். பொலிஸ் மேலதிகாரிகள் ஓரிருவரினால் தவறுகள் நடந்திருக்கலாம். விசேடமாக அம்பாறை சம்பவத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆயினும் கண்டியில் பொலிஸ் மேலதிகாரிகள் ஓரிருவரைத்தவிர ஏனைய உயர் அதிகாரிகள் மீது விரல் நீட்ட முடியாது. என்பதை சொல்லியாக வேண்டும். ஆதாரமின்றி எங்களுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

அவ்வாறே அரச தலைவர்களும் இந்த சம்பவங்கள் குறித்து  கவனம் செலுத்தி உள்ளனர். ஜனாதிபதியும்,பிரதமரும் இதில் ஈடுபட்டு தம்மால் ஆனவற்றை செய்துள்ளனர். ஆயினும் இது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்குவதற்கும், இதன்பின்னர் இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழாமலிருப்பதற்கும் அவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதில் ஈடுபட்ட குழுவினர் இதனை திட்டமிட்டே,  செய்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது அவசரமாக இடம்பெற்ற ஆத்திரமூட்டும் சம்பவத்தின் பிண்ணனியில் நடந்ததல்ல. இதற்காக ஏற்கனவே தயாராக இருந்தார்கள் என்பதற்கு எங்களிடம் போதிய சான்றுகள் உள்ளன. குற்றவிசாரணைப்பிரிவினர்    அவற்றை கண்டறிந்து  உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆகையால் அவற்றுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதுடன் இன்னும் தேடிப்பார்க்க வேண்டியவை உள்ளன.

முஸ்லிம்கள் சிலருடன்  ஏற்பட்ட பிரச்சினைக்கு ஏன் பள்ளிவாசல்களை தாக்க வேண்டும்? இது செய்திருக்க கூடாத விஷயமாகும். இவ்வாறு பள்ளிவாசல்களை சேதமாக்கியது எந்த அமைப்பினர் என்பதை கண்டறிய வேண்டும். இந்த சம்பவங்களின் பின்னால் உள்ள குழுவினரை அடையாளம் காணவேண்டியது ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

விசேடமாக கலுவான,அழுதவத்த விகாரைகளில் மணியை ஒலிக்க செய்து மக்களை ஒன்றுதிரட்டி கும்பல்களை ஏவிவிட்டு, செய்த காரியத்தை பற்றி தேடிப்பார்க்க வேண்டும். இதன்பின்னணியில் உள்ள அமைப்பினர் மிகவும் திட்டமிட்டே இதனை செய்திருக்கிறார்கள் என்பதே எங்களது அபிப்பிராயமாகும். இதையிட்டு உயர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி வருகிறார்கள்.இதே வேளை முஸ்லிம்கள் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள சந்தேகங்களை களைவதற்கும் முயற்சிக்க  செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் இருப்பதாக எங்களது சாதாரண சிங்கள மக்களில்  சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், மதகுருமார்களின் சிலரும் கூறுகின்றனர். உண்மையிலேயே இவர்கள் சொல்கின்ற தீவிரவாதம் இதுவரை பயங்கரவாதமாகவோ,வன்செயலாகவோ வளர்ச்சியடையவில்லை. அவ்வாறான சம்பவங்கள் நடந்ததாகவும் இல்லை. வேறு சமயங்களின் வழிபாட்டு தலங்கள் மீதோ, மதகுருமார்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டதாக இல்லை. தெல்தெனிய சம்பவம் போன்றவை அவ்வப்போது ஏற்படுவதுண்டு. அவற்றுக்கு  அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால் இச்சம்பவத்தோடு அம்பாறை சம்பவத்தை ஒப்பிட முடியாது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கண்டி மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்துபவர் என்கின்ற வகையிலும் இந்த சபைக்கு முதல்வர் என்கின்ற வகையிலும், பௌத்தர்கள் இது சம்மபந்தமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.அது பத்திரிகையில் வெளிவந்தவுடன் அவரை ஏசுகின்றனர். அவ்வாறான கருத்தை தெரிவிப்பதை கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் கூட இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கூற்றிலுள்ள பின்னணியையும் தேடிப்பார்க்க வேண்டும். அவ்வாறே அரச நிர்வாக கட்டமைப்பினுள்  இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாமல் போனதாலும், அதற்க்கு துணை போனதாலும் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.இவை ஆங்காங்கே நடந்துள்ளதை நாங்கள் காண்கிறோம்.இவ்வாறான சம்பவங்கள் இனியும் நடைபெறாத வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து முஸ்லிம்கள் மத்தியில் சிங்களவர்கள் பற்றியும் சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றியுமுள்ள தப்பபிப்பிராயங்களை களையவேண்டும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *