Breaking
Sun. Nov 24th, 2024
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு சபை நடவடிக்கைகள் மற்றும் தமது பொறுப்புகள், செயற்பாடுகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் சுயேச்சைக்குழு வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனை எம்.எஸ்.எம்.ஹாரிஸ் (நவாஸ்) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாநகர சபை செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே ஆணையாளர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“புதிய கலப்பு முறையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு போட்டியிட்ட சுயேட்சைக்குழுக்களில் சாய்ந்தமருது தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழுவும் மருதமுனை ஹெலிகொப்டர் சின்ன சுயேட்சைக்குழுவுமே நேரடியாக வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளன.

ஏனைய சுயேட்சைக்குழுக்களும் சில அரசியல் கூட ஒட்டுமொத்த வாக்குகளுக்காக ஒதுக்கப்படுகின்ற விகிதாசார ஆசனங்களையே பெற்றுள்ளன. அந்த வகையில் வட்டாரத்தில் நேரடியாக வெற்றியீட்டிய எம்.எஸ்.எம்.ஹாரிஸின் வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.

கல்முனை மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் தற்போது மூன்றாவது ஆட்சி நிர்வாக சபை அமையவுள்ளது. இதுவரை 19 உறுப்பினர்களைக் கொண்டிருந்த எமது மாநகர சபையினரின் எண்ணிக்கை இத்தேர்தலில் 41 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பினால் சபா மண்டபத்தில் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதனால் பொது மக்களை சபா மண்டபத்திற்குள் அனுமதிக்க முடியாத நிலை காணப்படுகிறது. என்றாலும் மாநகர சபை வளாகத்தில் தொலைகாட்சி திரைகள் மூலம் சபை அமர்வினை பொது மக்கள் பார்வையிட ஒழுங்குகள் செய்யப்படும்.

அதேவேளை தற்போது தெரிவு செய்யப்பட்டிருப்போரில் பெரும்பாலானோர் புதிய உறுப்பினர்களாவர். அதனால் சபை நடவடிக்கைகள் தொடர்பிலும் தமது பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக எமது மாநகர சபை மட்டத்திலும் மாகாண சபை மட்டத்திலும் கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

எதிர்வரும் ஏப்ரல் 02ஆம் திகதி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் இடம்பெறவுள்ள அங்குரார்ப்பண அமர்வின்போது எமது மாநகர சபைக்கான புதிய மேயர், பிரதி மேயர் ஆகியோர் உறுப்பினர்களிடையே நடத்தப்படும் இரகசிய அல்லது பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்” என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் ஆகியோரும் எம்.எஸ்.எம்.ஹாரிஸின் புதிய உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஹாரிஸின் உறவினர்களும் முக்கியஸ்தர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *