முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவையில் இருக்கவில்லை.
சில நிமிடங்கள் கழித்து, நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் அதனைப் பார்த்து விட்டு, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவிடம், தவறான ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருக்கும் விடயத்தை அறிவித்துள்ளார்.
சனத் நிசாந்த உடனடியாக மகிந்தவுக்கு அருகே சென்று ஆசனம் மாறி அமர்ந்திருப்பதை தெரிவித்தார்.
உடனடியாக மகிந்த ராஜபக்ச சம்பந்தனின் ஆசனத்தை விட்டு எழுந்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்ட மகிந்தவுக்கு அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை கூட்டு எதிரணி மேற்கொண்டு வரும் நிலையில், சம்பந்தனின் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தது சபையில் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.