(முகம்மத் இக்பால் )
எழுபத்திநான்கு சதவீதம் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட கண்டி மாவட்டத்தில் பதிமூன்று சதவீதம் முஸ்லிம்களும், ஏனையவர்களாக தமிழர்களும் வாழ்ந்துவருகின்றார்கள்.
அம்பாறையில் மிகவும் திட்டமிட்டவகையில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் நடந்துமுடிந்த கலவரங்கள் இரண்டு வாரங்களை அண்மித்துள்ள நிலையில், தங்கள் பழைய வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் எதிர்காலங்களில் இதுபோன்ற கலவரங்கள் தொடரமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்ற அச்சமும் பீதியும் அம்மக்களிடம் காணப்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் முற்றாக எரிக்கப்பட்ட தங்கள் வியாபாரத் தளங்களை மீளவும் கட்டியெழுப்பும் பணிகளை முஸ்லிம் வர்த்தகர்கள் துவங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், இழப்பீட்டினை மதிப்பீடு செய்ததன் பின்பு உரிய நிவாரண உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்திருந்தது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட இந்த இழப்பீட்டு தொகையானது எரியூட்டப்பட்டதை சுத்தப்படுத்தும் வேலைக்கே போதாது. என பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் கூறுவதனை காணக்கூடியதாக உள்ளது.
பல பள்ளிவாசல்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. அல்குரான் உட்பட அங்குள்ள ஏராளமான பொருட்கள் முழுமையாக எரிக்கப்பட்டுவிட்டன. அதனால் தொழுகை நடத்த முடியாத நிலையில் உள்ள பள்ளிவாசல்களில் பிரத்தியேகமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தொழுகைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறாக எரியூட்டப்பட்ட பழைய பள்ளிவாசல்களை இடித்துவிட்டு புதிதாக பள்ளிவாசல்களை அமைக்க வேண்டிய தேவைப்பாடுகள் அங்கு உருவாகியுள்ளது.
கலவரம் நடைபெற்றதன் பின்பு கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமல்லாது நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பாதுகாப்புப் படையினர்கள் மீது முற்றாக நம்பிக்கை இழந்துள்ளார்கள்.
கலவரத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினர்கள் உள்ள இடங்களில் கலவரம் நடைபெற்றபோது அவர்கள் இருந்த இடத்திலிருந்து பின்வாங்கியதாகவும், சில இடங்களில் பாதுகாப்பு படையினர்கள் பாத்துக்கொண்டு இருக்கத்தக்கதாக வன்முறைகள் சிங்கள காடையர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்குள்ள மக்கள் கூருவதுவே இந்த நிலைமைக்கு காரணமாகும்.
கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கண்டியின் தெல்தெனிய பகுதியில் ஒரு லொறியும், ஆட்டோவும் மோதிக்கொண்டதையடுத்து ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆட்டோவில் வந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் லொறியை ஓட்டிவந்த சிங்கள இளைஞ்சனை தாக்கினர். காயமடைந்த லொறி ஓட்டுனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு முஸ்லிம் இளைஞ்சர்கள் நான்கு பேரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.
சுமார் இரு வாரங்கள் மருத்துவமனையில் இருந்த சிங்கள இளைஞ்சன், மார்ச் 3ஆம் திகதியன்று உயிரிழந்தார். இன வன்முறையினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் குறித்த சிங்கள இளைஞ்சன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளான்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவனது விகாரமான உடல் சிங்கள மக்கள் மத்தியில் காட்சிபடுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பிரச்சினைகள் தெல்தெனியவில் உருவாக ஆரம்பித்தன. முஸ்லிம்களின் பொருளாதாரம் தீக்கிரையாக்கப்பட்டது.
மார்ச் ஐந்தாம் தேதி, கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸ் நிலையத்தை சிங்கள இளைஞ்சர் கும்பல் ஒன்று முற்றுகையிட்டது. அன்று நண்பகளிலிருந்து மிகப் பெரிய கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
இறந்த சிங்கள இளைஞ்சனின் உடலை திகண பகுதிக்கு ஊர்வலமாக கொண்டுவரப் போவதாக கதைகள் பரவியதை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த விடயம் அரச உயர்மட்டத்துக்கும் அறிவிக்கப்பட்டது.
அனைத்து கடைகளையும் மூடும்படி அறிவிக்கப்பட்டதும், கடை உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.
ஆனால் இப்படியொரு பாரியளவிலான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்றும், தங்களால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களை சாம்பலாகிய நிலையிலேயே மீண்டும் காணப்போகின்றோம் என்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பாதுகாப்பு படையினர்களை வெளியே காணமுடியாத, அதாவது முகாம்களுக்குள் முடங்கியிருந்த அன்றைய மதியம் ஒரு மணியளவில் திகணவின் மையப் பகுதியில் பாரியளவில் கூட்டம் குவியத் துவங்கியது. பின்பு அந்தக் கூட்டம் பல்லேகல்லவை நோக்கி சென்றதுடன் திகன பகுதியிலும் வன்முறைகள் வெடித்தது.
பிற்பகல் 2.மணியளவில் தாக்குதல் துவங்கியது. குறிப்பாக முஸ்லிம்களின் கடைகளையும், பள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின் வீடுகளையும், இலக்குவைத்து தாக்கியதுடன் அவைகள் எரிக்கப்பட்டது.
பின்பு தாக்குதல்கள் மாவட்டம் முழுக்க பரவலாக்கப்பட்டது. அதாவது அன்று இரவு கண்டி மாவட்டத்தின் முஸ்லிம்கள் வாழுகின்ற அனைத்து பிரதேசங்களிலும் பதட்டநிலை உருவானதுடன், தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதத்தினை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சிங்கள கலகக்காரர்களிடம் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களிடம் காணப்பட்டது.
இந்த கண்டி கலவரங்களுக்கு முன்பாகவே, முஸ்லிம்களுக்கெதிராக பாரியளவில் இன சுத்திகரிப்புக்கான சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
பெப்ரவரி 27 ஆம் திகதி நள்ளிரவு அம்பாறையின் பள்ளிவாசல் முன்பாக உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் கொத்துரொட்டி சாப்பிட்டுக்கொண்டிருந்த சிங்களவர் ஒருவர் அந்த கொத்துரொட்டியினுள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடிய மருந்து கலக்கப்பட்டுள்ளதாக கூறி வேண்டுமென்று குழப்பத்தினை ஏற்படுத்தினார்.
பின்பு குறுகிய நேரத்துக்குள் நூற்றுக்கணக்கான சிங்கள காடையர்களை அழைத்துவந்து அந்த பிரதேசத்தில் இருந்த அனைத்து முஸ்லிம் ஹோட்டல்களையும், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு பள்ளிவாசலையும் சேதப்படுத்தினார்கள்.
இதற்கிடையில், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் பொருளை கொத்துரொட்டியினுள் கலந்ததாக, கடை உரிமையாளர் கூறும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோ, வலுக்கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது பிறகு தெளிவுபடுத்தப்பட்டது.
அந்த ஹோட்டலில் மலட்டு தன்மையினை ஏற்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டதாக கூறப்பட்ட உணவினை பகுப்பாய்வுக்கு அனுப்பியபின்பு அவ்வாறு மருந்து ஏதும் உணவில் கலக்கப்படவில்லை என்று ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியது.
பொதுபலசேனா இயக்கம் உருவாகியதிலிருந்து நீண்ட காலமாகவே, முஸ்லிம்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சிங்களவர்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
முஸ்லிம்கள் நடத்தும் சாப்பாட்டுக் கடைகளில் மலட்டு தன்மையை உருவாக்கும் மாத்திரையை வைப்பதாகவும், டெக்ஸ்டைல்களில் விற்கப்படும் உள்ளாடைகளிலும் இவ்வாறான மருந்துகளை தடவுவதாகவும் நாடு முழுக்க வதந்திகளைப் பரப்பி வருகின்றார்கள்.
இந்த கலவரத்தினை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், மார்ச் ஐந்தாம் தேதி மாலையே கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவினால் எந்தவொரு மாற்றத்தினையும் காணமுடியவில்லை. சிங்கள காடையர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினார்கள். பின்பு மார்ச் ஆறாம் திகதியிலிருந்து 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் ஜனாதிபதியினால் பிரகடனம் செய்யப்பட்டது.
கண்டி வன்முறை சம்பவங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 445 வீடுகளும், கடைகளும், 24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும், இதன் பெறுமதி எண்ணூற்றி எண்பத்தைந்து கோடி ரூபாய்கள் என்றும், 28 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு செய்தது.
ஆனால் அரசாங்கத்தினால் அறிவிப்பு செய்யப்பட்ட கணக்கெடுப்பினைவிட அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
பலம்வாய்ந்த விடுதலைப் புலிகளின் மரபுப்படையணிகள், கனரக ஆயுதங்கள், தற்கொலை குண்டு தாக்குதல்கள், நிலகன்னிவெடிகள் என அனைத்தையும் முறியடித்து வெற்றிகொண்ட இலங்கை பாதுகாப்பு படையினர்களுக்கு, எந்தவித நவீன ஆயுதங்களுமின்ரி வன்முறையில் ஈடுபட்ட சிங்கள இளைஞ்சர் கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஆச்சர்யம்தான்.