Breaking
Sat. Apr 27th, 2024
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் தமக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் தாம் அடிமைகள் போல் பயன்படுத்தப்படுவதாக கூறி குறித்த ஆடைற்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் இன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனைவருக்கும் விடுமுறை வழங்குவதாக தெரிவித்து தொடர்ச்சியாக இரவு பகல் பாராது அடிமைகள் போல் வேலை செய்ய வேண்டிய நிலையில் தற்போது குறித்த விடுமுறை தொடர்ச்சியாக வழங்க முடியாது என ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது.

எனினும் அங்கு கடமையாற்றும் அதிகமான பெண்கள் குறித்த விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும் என கோரி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கை ஆடை தொழிற்சாலை நிர்வாகத்தினால் மறுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.mannaar_carmance_009

இந்த நிலையில் இன்று காலை குறித்த ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்ற பெண்கள் கடமையினை மேற்கொள்ளாது ஆடைத்தொழிற்சாலைக்குள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனினும் குறித்த ஆடைத்தொழிற்சாலையின் முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வையாளர்கள் எமது கோரிக்கையினை ஏற்காது எங்களை கடமையில் ஈடுபட வற்புறுத்தினார்கள்.

இந்த நிலையில் நாங்கள் அனைவரும் ஒரே முடிவுடன் செயற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரும், ஆண் மேற்பார்வையாளர் ஒருவரும் சில பெண்களை தாக்க முற்பட்டனர். இறுதியாக குறித்த பெண் மேற்பார்வையாளர் வேலை செய்ய முடிந்தால் நில்லுங்கள் இல்லாது விட்டால் அனைவரும் வெளியில் செல்லுங்கள் என கடும் தொனியில் தெரிவித்தார்.mannaar_carmance_001

இந்த நிலையில் நாங்கள் அனைவரும் ஆடைத்தொழிற்சாலையினை விட்டு வெளியில் வந்தோம் என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருவதாகவும் இவ்விடையத்தில் பெண்கள் அமைப்பு மற்றும் சமூக அமைப்புக்கள் மௌனம் காத்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கவலையுடன் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் தொடர்ச்சியாக மன ரீதியாக பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.mannaar_carmance_004

ஆண் மேற்பார்வையாளர்கள் தமிழிலும், சிங்களத்திலும் பெண்களை தீய வார்த்தைகளினால் பேசுகின்றனர்.

நாங்கள் தைக்கின்ற ஆடைகளில் எதுவும் பிழைகள் ஏற்பட்டால் எங்களது முகத்தில் தூக்கி எறிந்து தீய வார்த்தைகளினால் பேசுகின்றனர்.

இரவு பகல் பாராது கடுமையாக வேலை வேண்டுகின்றனர்.சில நாட்களில் இரவு நேரங்களில் பலவந்தப்படுத்தி எம்மை கடமையில் ஈடுபடுத்துகின்றனர்.

மேலதிகமாக அதிக நேரம் கடமையில் ஈடுபட்டாலும் உரிய மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் நீங்கள் எல்லாம் மன்னார் கழுதைகள் என சிங்கள அதிகாரிகளும், மேற்பார்வையாளர்களும் பேசுகின்றனர். என அந்த பெண்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மன்னார் ஆயரின் செயலாளர் அருட்தந்தை எ.முரளிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.கணசீலன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, றிப்கான் பதியுதீன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரதி நிதி ஜஸ்ரின், மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர் அந்தோனி சகாயம் உள்ளிட்ட குழுவினர் ஆடைத்தொழிற்சாலைக்கு வெளியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பெண்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

பின் குறித்த குழுவினர் ஆடைத்தொழிற்சாலைக்குள் சென்று முகாமைத்துவ அதிகாரிகளுடன் நீண்ட நேரம் உரையாடினர்.

பின் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பல நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள், வருகை தந்த பிரதி நிதிகள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கிடையில் சந்திப்பு இடம் பெற்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக வருகை தந்த அருட்தந்தையர்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த பெண்கள் காலை 10.45 மணியளவில் தமது பகிஸ்கரிப்பை கை விட்டு மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.

குறித்த பெண்கள் முன் வைத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு முன்வைக்கப்படும் என ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் உறுதியளித்த நிலையிலே குறித்த பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *