அம்பாறை சம்பவத்தின் மூலம் அந்நியோன்யமாக வாழும் பொதுமக்கள் மத்தியில் இனமோதல்களை ஏற்படுத்த பேரினவாதிகள் முயற்சிப்பதாக ரிசாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற இனவாத தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 30 வருடகால யுத்தம் நிறைவடைந்து இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழத் தலைப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒருசிலர் இனங்களுக்கிடையிலான பதற்றத்தைத் தோற்றுவிக்கும் தீவிர முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய அம்பாறை சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே இச்சம்பவத்தின் சூத்திரதாரிகளை இனம் கண்டு நீதியின் முன்னிறுத்தி தண்டனை பெற்றுத்தர அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.