தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லாசாலையில் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 17 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்தால்தான் போட்டியை நடத்த முடியும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் நட்சத்திர கிரிக்கெட்டை நடத்தலாம் என்று தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. இதைத்தொடர்ந்து விளையாட்டுக்கான ஏற்பாடுகள் சூடுபிடித்து உள்ளன. கிரிக்கெட்டில் விளையாடும் நடிகர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். 6 விளையாட்டு வீரர்களையும் 6 ஓவர்களையும் கொண்டதாக இந்த விளையாட்டு இருக்கும்.
சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேப்டன்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அர்ஜுன், ஷாம், பிரசாந்த், விக்ரம் பிரபு, ஜெய், அரவிந்தசாமி, உதயா, விக்ராந்த், நந்தா, அருண் விஜய், சூரி, ரமணா, மன்சூர் அலிகான், விஷ்ணு, விஜய் வசந்த், பிருத்வி, போஸ் வெங்கட், வைபவ், சக்தி, அசோக், அதர்வா, ஆதவ், செந்தில், சதீஷ் உள்பட 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். 8 கதாநாயகிகள் விளம்பரதூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 1000 நடிகர்- நடிகைகள் கலந்துகொள்கிறார்கள். விளையாட்டைக் காண 20 ஆயிரம் ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.500, ரூ.1000, ரூ,2000, ரூ.5000 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
டிக்கெட் கட்டணம் மற்றும் சேட்டிலைட் உரிமை மூலம் நடிகர் சங்கத்துக்கு ரூ.13 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.