மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்ற சம்பந்தனின் கூற்று பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையையே வெளிப்படுத்துகிறது – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவிப்பு.
மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று பாராளுமன்றில் சம்பந்தன் கூறியது உணர்ச்சி அரசியலோ அல்லது தனது பதவி போய்விடும் என்ற பதட்டத்தின் வெளிப்பாடோ அல்ல. அவர் இந்திய மேற்குலகின் நலனடிப்படையில் நிதானத்துடன் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கையே என கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தாங்கள் கடந்த எட்டு வருடமாகக் கூறிவந்த பூகோள அரசியல் போட்டியின் யதார்த்தத்தை சம்பந்தன் தற்போதே ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (21.02.2018) புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர்,
“சமஷ்டி சாத்தியமில்லை, தமிழர் தேசத்தின் அங்கீகாரம் சாத்தியமில்லை, நடைமுறைத் தீர்வு என்ற பெயரில் சிங்களம் தருவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறிவந்து ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வினை ஏற்றிருக்கின்ற சம்பந்தன் திடீரென நேற்று பாராளுமன்றில் கொதித்தெழுந்து தாமரை மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று கூறியிருக்கின்றார் என்றால் அது அவர் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட கருத்து அல்ல. அல்லது வடக்கு கிழக்கிலே தேர்தலில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தமிழ்மக்களுடைய வாக்குகளைக் கவர்வதற்காக அவர் கூறிய கருத்தும் அல்ல. மாறாக தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவி போய்விடப்போகின்றது என்பதற்காக பதட்டத்தில் கூறிய கருத்தும் அல்ல.
மாறாக அவர் நிதானமாக மிகத் தெளிவாக தான் ஒரு இலங்கையர் என்ற அடிப்படையில் அந்தக் கருத்தை கூறியிருக்கிறார். அவர் எப்பொழுதும் தன்னை தமிழராக முன்னிலைப்படுத்தியதில்லை. சிங்கள அரசின் முகவராகவும், இந்திய மேற்கத்தய அரசுகளின் தூதுவராகவுமே தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறார். அந்த நலன்களின் அடிப்படையிலேயே அவரது கருத்தும் அமைந்திருந்தது. கூட்டமைப்பினரும் அவ்வாறுதான் நடந்துகொள்கின்றார்கள்.
2005 ஆம் ஆண்டு பதவி ராஜபக்ச முழுக்க முழுக்க சீன சார்பு நிலையினைக் கடைப்பிடித்து இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுவாக காலூன்றச் செய்துள்ளார். அபிவிருத்தி என்றபோர்வையில் இலங்கை முழுவதும் சீனர்களை ராஜபக்ச காலூன்றச் செய்தார். இதன் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டடை துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பன சீனர்களால் அமைக்கப்பட்டன. கொழும்பில் துறைமுக நகரத்திட்டமும் சீனர்களைக் கொண்டே ராஜபக்ச உருவாக்க முயன்றார்.
இதனாலேஐய 2015 ஆம் ஆண்டு இந்திய, மேற்கு நாடுகளால் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகக் கொண்டுவரப்பட்டார். அதனடிப்படையில் மேற்கு நாடுகளின் நலன்களுக்கு ஒத்துளைக்கக்கூடிய ரணில்-மைத்திரி அரசு உருவாக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு தமது பரிபூரணமான ஒத்துளைப்பை நல்கிவந்தது.
இந்த நிலையில் தான் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மீண்டும் ராஜபக்சவிற்கு தங்களுடைய வாக்குகளை வழங்கியிருக்கின்றார்கள். இது எதனைப் பிரதிபலிக்கின்றது என்றால் தமிழர் தரப்புக்கள் தமிழ்த் தேசியவாதத்தைக் கைவிட்டு தமிழ் அரசியலில் இருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கி ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு வடக்குகிழக்கு இணைப்பை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு தயாரி எனக் கூறிய பிற்பாடும் சிங்கள மக்கள் ராஜபக்ச போன்ற சீன சார்புடையவர்களைத்தான் தெரிவுசெய்யப்போகின்றார்கள் என்று கூறினால் இந்தத் தீவு மீண்டும் இந்திய, மேற்கு நலன்களுக்கு எதிராக ராஜபக்ச போன்றவர்களின் மீள் எழுச்சியால் சீனாவின் கைகளுக்குள் செல்லப்போவதை இந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனைப் பார்த்துக்கொண்டும் இருக்கப்போவதில்லை.
இந்தத் தீவை மையப்படுத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பூகோள அரசியல் போட்டி அவ்வாறு செல்வதற்கு இடமளிக்காது. நிச்சயமாக மீண்டும் சீன சார்புடைய ராஜபக்சவோ அல்லது சீன சார்புடைய வேறு ஒருவரோ இந்த நாட்டின் தலைமை சக்தியாக வந்தால் இந்த நாடு பூகோள நலனின் அடிப்படையில் உடைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தமிழர்களிடம் தனிநாடாக கையளிக்கப்படும் என்பதைத்தான் சம்பந்தன் எச்சரித்திருக்கின்றார்.
அவர் தமிழ் மக்களினுடைய நலனின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை. இந்த நாடு இரண்டாகப் பிரிந்துவிடக்கூடாது சிங்களவர்களுடைய மேலாதிக்கம், பௌத்தம் அரச மதம் என்பதற்கு தமிழர்கள் முழு அங்கீகாரம் கொடுத்து ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கும் நிலையில் வீணாக நீங்கள் இந்த நாட்டை உடைக்கப்போகின்றீர்கள் என்ற எச்சரிக்கையை இந்திய மேற்கு நாடுகளின் நலனின் அடிப்படையில் நின்றுகொண்டே அவர் கூறியிருக்கின்றார். அனைவரும் இதனை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
நாங்கள் கடந்த 8 வருடங்களாக இதனைத் தெளிவாக கூறிவந்திருக்கின்றோம். அதாவது இந்தத் தீவை மையப்படுத்தி ஒரு பூகோள அரசியல் போட்டி நடைபெறுகின்றது. இந்த பூகோள அரசியல் போட்டியில் தமிழர்கள் தங்களுடைய நலனின் அடிப்படையில் முடிவெடுத்து செயற்பட்டால், தமிழர்களைப் பயன்படுத்த நினைக்கின்ற இந்த வல்லாதிக்க சக்திகளின் உதவியோடு நாங்கள் இந்தத் தீவிலே தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்று தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மகிழ்வுடன் வாழ முடியும் என நாங்கள் தொடர்ச்சியாக கூறிவந்திருக்கின்றோம்.
இதனை ஏற்றுக்கொள்ளமல் அக் காலகட்டங்களில் மக்களுக்கு பொய்களைக் கூறி ஏமாற்றிவந்தவர்கள் இன்று தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பேரினவாத எழுச்சி காரணமாக மீண்டும் சீன சார்பு போக்குடையவர்களின் எழுச்சி காரணமாக தாங்களே மக்கள் மத்தியில் கூறிவந்த பொய்களை மீறி நாங்கள் கூறிவந்த பூகோள அரசியல் போக்கினை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிலை உருவாகியுள்ளது” – என்றார்.