Breaking
Thu. Nov 21st, 2024

(ஊடகப்பிரிவு)

மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளிலே ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் மேலும் கூறியதாவது,
“கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை, வேறு கட்சிகளிடம் கையளித்ததன் மூலம், நீங்கள் அடைந்த நன்மைகள் என்ன? நீங்கள் வசிக்கின்ற இடங்களில் பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளதா? கிராமிய வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டதா? ஏற்கனவே இருக்கின்ற சுகாதார சேவைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? குடியிருப்பதற்கான வீடுகள் ஏதாவது கட்டப்பட்டுள்ளதா? யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அவலங்களுடன் வாழும் உங்களின் வாழ்க்கை வசதிகள் மேம்படுத்தப்பட்டதா? உங்கள் பிரதேசங்களிலே பயணஞ்செய்வதற்கு சீரான பாதைகள் இல்லை. மழை வந்தால் வெள்ளப்பெருக்கு. கழிவகற்றுவதற்கான ஒழுங்கான வடிகான்கள் இல்லை.
இவ்வாறான இன்னோரன்ன பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, நீங்கள் இன்னும் துன்பத்துடன்தானா வாழப் போகின்றீர்கள்? நாம் எத்தனையோ தேவை உள்ளவர்களாக இருக்கின்றோம். மத்திய அரசாங்கம் வழங்குகின்ற நிதியுதவியுடன் மாத்திரம்தான், இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றதேயொழிய, உள்ளூராட்சி அதிகாரங்களைக் கையேற்றவர்கள் உருப்படியாக எதுவுமே செய்யவில்லை.

நமது மக்கள் பல்வேறு தேவை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். கடந்த நான்கு வருடங்களை நாங்கள் அநாவசியமாகச் சீரழித்தது போன்று, அடுத்த நான்கு வருடங்களையும் அநியாயமாக்கப் போகின்றோமா? நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. யுத்தத்தினால் இத்தனை தசாப்தங்களாக நாம் பட்ட துன்பங்களும், அனுபவித்த கஷ்டங்களும் போதாதா?
தேர்தலை மையமாக வைத்து, அரசியல் அதிகாரங்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில் வருகின்ற கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாக்களித்து, உங்கள் எதிர்காலத்தையும், நல்ல முறையான வாழ்க்கையையும் நாசமாக்கிவிடாதீர்கள்.
2015 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, நாங்கள் உருவாக்கிய நல்லாட்சியின் மூலம், நமக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த உள்ளூராட்சித் தேர்தல் நமக்கு நல்ல சந்தர்ப்பம். இந்த பொன்னான வாய்ப்பை நீங்கள் இழந்துவிட வேண்டாம்.

மன்னார் மாவட்டத்திலே பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு, நாங்கள் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகின்றோம். மன்னார் நகரத்தை நவீனமயப்படுத்துவதற்காகவும் நிதியொதுக்கியுள்ளோம். சிலாவத்துறை நகரத்தையும் நவீனமயப்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்துள்ளோம். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றுவதற்கான செயற்பாடுகளில், நாங்கள் இதய சுத்தியுடன் ஈடுபட்டு வருகின்றோம். கட்டுக்கரைக்குளத்தை புனரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்திய மீனவர்கள் நமது கடலுக்குள் அத்துமீறி நுழைந்து, நமது வளங்களை சூறையாடி வருகின்றனர். இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாமும் உறுதியாகவுள்ளோம்.

எனவே, இவ்வாறான பிரச்சினைகளை இலகுவாகத் தீர்ப்பதற்கு மத்திய அரசின் அதிகாரங்களை மாத்திரமின்றி, உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியும் எமது கைக்குக் கிட்ட வேண்டும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சுவாமிநாதன், மாகாண சபை உறுப்பினர் அலிகான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அமீன், செல்லத்தம்பு, மார்க் உட்பட பலர் உரையாற்றினர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *