Breaking
Sat. Nov 23rd, 2024

(ஊடகப்பிரிவு)
கண்டி மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமது அரசியல் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு, அவர்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் வெளிப்படுத்துகின்றது.

கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை கம்பளை நகரசபை ஆகியவற்றில், தனித்துக் களமிறங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஆதரித்து அலையலையாக மக்கள் திரண்டிருந்தனர்.

கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை ஆதரித்து உடுதெனிய, தெல்தொட்ட, கஹடபிடிய, கலிகமுவ, தெல்லங்க, படுபிடிய, அம்பரபொல, வெலம்பொட, குறுக்குத்தல, தெஹியங்க, உக்ரஸ்பிட்டிய, இனிகல, உடதலவின்ன ஆகிய இடங்களில் கடந்த  (28) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன.
காலை பத்து மணி தொடக்கம் நள்ளிரவு வரை இடம்பெற்ற சுமார் 13 கூட்டங்களில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

காலாகாலமாகத் தேசிய கட்சிகளுக்கும், ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும் தாங்கள் வாக்களித்திருந்த போதும், இந்த மாவட்டத்திலுள்ள எந்த முஸ்லிம் பிரதேசங்களிலும் அபிவிருத்தியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை, தேர்தல் மேடைகளில் பேசிய சமூக ஆர்வலர்கள் வெளிப்படுத்தினர்.
தேர்தலுக்கு தேர்தல் வந்து, தமது வாக்குகளைப் பெற்று அமைச்சர்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது கோரிக்கைகள் எதனையுமே நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தனர்.

அந்தக் கூட்டங்களில் வேட்பாளர்கள், தமது கிராமங்களில் உள்ள குறைபாடுகளை அமைச்சரிடம் எடுத்துக் கூறினர். அமைச்சரின் உரைகளை அங்கு குழுமியிருந்த மக்கள் மிகவும் அமைதியாகவும், உன்னிப்பாகவும் கேட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் அவர்களின் ஆரவாரம், மக்கள் காங்கிரஸுக்கே தமது முழுமையான ஆதரவு என்பதை வெளிப்படுத்தியது.

பச்சைக்கும், நீலத்துக்கும், மஞ்சளுக்கும் வாக்களித்த கைகள், இனி மயிலுக்கே வாக்களிக்கும் என்ற உறுதியை ஊர்ப்பிரமுகர்கள் கூட்டத்தில் தெரிவித்ததை அவதானிக்க முடிந்தது.
“முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் ஏற்படும் போது துணிந்து, உயிரையும் துச்சமென மதிக்காது, நடுநிசி வேளையிலே அமைச்சர் ரிஷாட் சம்பவ இடத்துக்குச் செல்வதையும், பாதிக்கப்பட்டவர்களின் குறைதீர நடவடிக்கை எடுப்பதையும் நாங்கள் கண்ணாரக் கண்டிருக்கின்றோம். அதனால்தான் இம்முறை தேர்தலில், மயில் கட்சியின் சார்பாக களத்தில் இறங்கியுள்ளோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கண்டி மாவட்டத்தில் தனக்கு வாக்குக் கேட்பதற்காக வரவில்லை. வேட்பாளர்களாகிய எங்களை வெல்ல வைப்பதற்காகவே இங்கு வந்துள்ளார். எனவே, எங்களை வெல்ல வைத்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி, உள்ளூராட்சி சபைகளில் மட்டுமின்றி, அவர்களின் அதிகாரத்தின் மூலம், நமது மக்கள் பயனடைய வழி வகுப்போம்” இவ்வாறு மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டங்களில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *