Breaking
Sun. Nov 24th, 2024

(ஊடகப்பிரிவு)
வன்னி மாவட்டத்தில் ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும், குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்கள எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாரம்மல பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களான பைசர் மற்றும் மபாஸ் ஆகியோரை ஆதரித்து, நாரம்மல, பொல்கஹயாயவில் நேற்று  (27) காலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான எம்.என்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்,

அமைச்சர் மேலும் கூறியதாவது,

மக்கள் காங்கிரஸை பொறுத்தவரையில் சின்னங்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. சமூகத்தை காப்பாற்ற வேண்டுமென்ற உயரிய நோக்கிலேயே, நாம் இந்தப் பிரதேசத்தில் களத்தில் இறங்கியுள்ளோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்ட போதும், வேறுசில முஸ்லிம் கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக, தேர்தலில் நாம் நிறுத்திய வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. என்னைத் தோற்கடிக்க வேண்டுமென்று அவர்கள் செயற்பட்டதனால், இறுதியில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் சமூகம் தோற்றுப் போனது.

குருநாகல் போன்ற இடங்களிலே நாங்கள் பெரும்பான்மை மக்களுடன் அன்னியோன்னியமாக வாழ்கின்ற போதும், நாங்கள் அடிமைகளாகவோ, கோழைகளாகவோ, ஊமைகளாகவோ வாழ வேண்டுமென எவரும் நினைக்கக் கூடாது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இனங்களுக்கிடையே எந்தக் காலத்திலும் முறுகல் ஏற்பட வேண்டுமென விரும்பியவர்கள் அல்லர். வன்முறைகளை நாங்கள் ஒருபோதும் ஆதரித்தவர்களும் அல்லர். நாங்கள் தனித்துவமாக வாழ்ந்து வருகின்ற போதும், இன சௌஜன்யத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். கடந்த காலங்களில் எம்மை வேண்டுமென்றே சீண்டும் முயற்சிகளை இனவாதிகள் மேற்கொண்ட போதும், நாங்கள் சட்டத்தின் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை கொண்டிருந்தோம்.
கடந்த அரசு காலத்தில் முஸ்லிம்கள் மீது அடாவடித்தனங்கள் இடம்பெற்ற போது, எமக்கு நீதி கிடக்காததினாலேயே, ஒட்டுமொத்தமாக ஒருமித்து இந்த அரசை கொண்டுவந்தோம். ஆனால், அரசின் நடவடிக்கைகள் எமக்கு பாதகமானதாக அமைந்துவிடுமோ! என்ற பாரிய அச்சத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டிய தேவை நமக்கு எழுந்துள்ளது. நாம் ஆட்சியின் பங்காளர்களாக இருந்த போதும், சமூகப் பிரச்சினை என்று வரும்போது, ஒருபோதுமே மௌனமாக இருக்கமாட்டோம். அவ்வாறு இருக்க வேண்டுமென எவரும் எதிர்பார்க்கவும் கூடாது.
முஸ்லிம் கட்சிகள் என்ற பெயரில் இருப்பவை, தமது தனிப்பட்ட நலன்களுக்காக சோரம் போவதைப் போல், நாம் சோரம் போகவும் மாட்டோம்.

இந்தப் பிரதேசத்தில் உங்களுக்குச் சேவை செய்யக் கூடிய பொருத்தமான வேட்பாளர்களை நாம் களமிறக்கியுள்ளோம். அவர்கள் வெற்றி பெற்றால் உள்ளூராட்சி சபைகளிலே மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உழைக்கவும் அரும்பாடு படுவார்கள் என்பதை, கட்சியின் தலைவர் என்ற வகையில், நான் உறுதியாகக் கூறுகின்றேன். உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பணியாற்றுகின்றார்களா என்பதையும் நாம் கண்காணிப்போம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அமீன், இர்பான் உட்பட வேட்பாளர்கள், பிரதேசவாசிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *