Breaking
Fri. Nov 22nd, 2024

(ஊடகப்பிரிவு)

இறக்காமத்தின் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனநாகய ரீதியாக நாம் பல்வேறு விடயங்களை கோரிய போதும் எமது சமுதாயத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற நம்பிக்கை இழந்து நமது இளைஞர்களும் நமது மக்களும் வேறு பாதையில் இறங்கி பயணிக்கக் கூடாது என்பதற்காகவும், நமது சமுதாயத்தினைப் பாதுகாப்பதற்காகவும், நமது மக்களுக்கான விமோசனத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்காகவுமே நாம் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்.

நமது மக்கள் பல்வேறான விடயங்ளை இழந்திருக்கின்றார்கள். அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காக முஸ்லிம் கட்சியின் பெயர்களை வைத்துக்கொண்டு, நமது மக்களின் வாக்குகளை சூறையாடிக் கொண்டிருப்பவர்கள் இதுவரை சமூகத்திற்காக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாம் நமது கூட்டமைப்பிற்காக வாக்குகள் கேட்பது அந்தந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களின் அபிவிருத்திக்காகவும், அந்தந்தப் பிரதேச மக்கள் இழந்தவைகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவும், நீண்ட காலமாக மக்கள் பெறமுடியாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் விடயங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவுமே அன்றி எமது சுயநலத்திற்காக அல்ல.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது “எமக்கு ஆணை தாருங்கள் நாம் பல்வேறு விடயங்ளைப் பெற்றுத் தருவோம்” என ஐக்கிய தேசியக் கட்சியில் வாக்குகள் கேட்டு, மூன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் கட்சியின் ஆட்சியாளர்கள் நமது மக்களுக்காக கடந்த இரண்டரை வருட காலமாகப் பெற்றுக்கொடுத்த ஒரு விடயத்தினையேனும் அவர்களால் சொல்ல முடியுமா?
“இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவது மாயக்கல்லி மலையில் உள்ள சிலையினை அகற்றுவதற்காகவும், நமது மக்களின் காணிகளை மீட்பதற்காகவுமே. சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறவில்லை” என கூச்சமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சொல்லித் திரிகின்றது.

இதே ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு மூன்று பாராளுமன்ற உறுப்புரிமையினைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அப்போது “அம்பாறை மாவட்டத்தின் சாரதியும் நாமே நடத்துனரும் நாமே” என மார்தட்டிப் பேசிக் கொண்டிருந்தது. ஆனால், மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலையினை அப்போது அகற்ற முடியாமல் போன நடத்துனரும் சாரதியும், இப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “ஆணை தாருங்கள்” என்று யானைச் சின்னத்திற்கு வாக்குக் கேட்கின்றார்கள்.

காலத்திற்குக் காலம் பொய்யான பேச்சுக்களையும் பசப்பு வார்த்தைகளையும் மேடைக்கு மேடை ஏறி, வீர வசனங்கள் மட்டுமே அவர்களால் பேச முடியுமே தவிர, நமது மக்களின் நலன் சார்ந்த எந்தவொரு விடயத்தினையும் அவர்களால் பெற்றுக்கொடுக்க முடியாது.

நமது சமூகத்திற்கு எங்கு அநீதிகள், அட்டூழியங்கள், அடக்குமுறைகள் ஏற்பட்டாலும் நாம் துணிந்து நின்று குரல் கொடுத்து வருகின்றோம். நாமும் நமது சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டும் காணாமலும் இருந்திருந்தால் சிங்கள மக்கள் மத்தியில் நாமும் நல்லவர்கள் போல் இருந்திருக்கலாம்.

இந்த நாட்டில் உள்ள இனவாத, மதவாத சக்திகள் எமது மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கொடுக்கவிடாமல் தடுப்பதற்கு எத்தனையோ வழக்குகளை நீதி மன்றங்களில் தாக்கல் செய்திருக்கின்றார்கள். அப்பாவி ஏழை மக்களின் கண்ணீரின் வலிமையினை நாம் புரிந்தவர்கள், நமது மக்களின் அழுகுரலின் அவஸ்தைகளை நாம் நன்கறிந்தவர்கள். அதனால் எந்தத் தடை வந்தேனும் நமது மக்களின் ஒரு அங்குல நிலத்தினைக் கூட விட்டுக் கொடுக்காமல் போராடி வருகின்றோம். என்னை சிறையில் அடைத்து விட வேண்டும் என்று சில தரப்பினர் வேண்டுமென்று பொய்யான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துகின்றார்கள்.

சர்வதேச ரீதியில் கீர்த்தியாக பேசப்படும் பொத்துவில் பிரதேச மக்கள், பல்வேறு விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரி வருகின்றனர். சமூகத்தின் பெயரை வைத்துக்கொண்டு கட்சி நடத்துபவர்கள் அவர்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒரு விடயத்தையேனும் அவர்கள் சொல்லட்டும் பார்ப்போம். இப்பிரதேசத்தில் எத்தனையோ மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அல்லல்படுகின்றார்கள். இப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்காக வீடமைப்புத் திட்டத்தினை உருவாக்குவற்காகவும், இன்னோரன்ன அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காகவும் எம்மால் முன்னெடுக்கப்படும் அத்தனை விடயங்களுக்கும் மாற்று சக்திகளால் தடை போடப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டு இம்முறை தேர்தலில் நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டும் என்றார்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *