எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு இன்று சந்தோசபுரம் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்திற்கு முன்னால் மக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பசுமை திருகோணமலை அமைப்பு மற்றும் இலங்கை பழங்குடியினர் உரிமைகளுக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி போராட்டத்தில் நிலக்கரியை எரித்து எம்மை நோயாளியாக்காதே!, எங்கள் விளை நிலங்களை நாசமாக்காதே!, எமது சூழலை பாதிக்கும் அனல் மின் நியையத்தை ஆரம்பிக்காதே!, எங்கள் வாழ்க்கையை எரித்தா நாட்டுக்கு வெளிச்சம்! போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணமும் கோடாரிகளை ஏந்திய வண்ணமும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் விறகு வெட்டுதல், தேன் எடுத்தல், வேட்டையாடுதல், விவசாயம் போன்ற வாழ்வாதார மேம்பாட்டிற்காக செய்யப்பட்டு வந்த தொழில்கள் அனல் மின் நிலையம் அமைப்பதினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரனிடம், பசுமை திருகோணமலை அமைப்பினால் மகஜர் கையளிக்கப்பட்டது.
அம்மகஜரில் இலங்கையில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மை கருதுகின்றோம். எம்மில் ஒரு பிரிவினர் மஹியங்கனையை அண்டிய பகுதிகளில் ஒரு பிரிவாகவும் நாம் வாகரை மற்றும் வெருகல் மூதூரை அண்டிய சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றோம்.
கடந்து போன வன்முறைச் சூழல் முழுவதும் யுத்தத்திற்கும் வறுமைக்கும் இடையில் பல துன்பங்களை அனுபவித்து தற்பொழுது நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம்.
ஆனாலும் கடந்த ஒரு மாத காலமாக எமது பகுதியில் மிகவும் பாரதூரமான செயற்பாடுகள் நடைபெற்று வருவது மிகுந்த வேதனையை அளிக்கின்றது. அனல் மின் நிலையம் அமைக்கப்பட போவதாகவும் இனிமேல் எங்களால் சமையலுக்கு விறகை கூட எமது வனப்பகுதியிலிருந்து பெற முடியாதென்றும் கூறி எங்கள் பகுதியை சுற்றி வேலிகளை அமைத்து வருகின்றார்கள்.
தற்போது அடைக்கப்படும் இப்பகுதியின் வனம் முழுவதும் காலம் காலமாக எமது ஜீவனோபாயத்திற்கான வனப்பகுதியாகும். குழந்தைகள் வறுமையிலும் செம்மையான எதிர்காலத்தை பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் முயற்சித்து கட்டுவித்த கிறவல்குழி சிவசக்தி வித்தியாலயத்தின் வேலியோரமாக தற்போதைய வேலி அமைக்கப்படுகின்றது. இம்முயற்சிகள் எமது இருப்பை கேள்விக்குறியாக்குவதுடன் எமது சந்ததியினரின் எதிர்காலத்தினையும் சேர்த்து குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே எமது பகுதியில் அமைக்கப்பட உள்ள அனல் மின் நிலையத்தை அமைக்காமல் தடுத்து நிறுத்துமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம் எனவும் அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.