Breaking
Sat. Nov 23rd, 2024

 (சுஐப் எம்.காசிம்)

“அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் எமது கட்சிக்கு வழங்கி, அதற்கான அங்கீகாரத்தை தாருங்கள்” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பகிரங்க அறைகூவல் விடுத்தார்.

கிண்ணியாவில் நேற்று முன்தினம் (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களைப் போல, நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை மிகவும் சாதாரணமான தேர்தல் என நினைத்துவிடாதீர்கள். ”இது ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. இதனால் எதனையும் சாதிக்க முடியாது” என்று சில அரசியல்வாதிகள் உங்களிடம் வந்து கதைகளைக் கூறுவார்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், இது ஒரு திருப்புமுனையான தேர்தலாகக் கருதப்படுகின்றது.

முப்பது வருடகால யுத்தத்தில் நமது சமூகம் இழந்த இழப்புக்களும், நஷ்டங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அதுமட்டுமின்றி, கடந்த ஆட்சியின் அந்திமகாலத்திலே, நமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவே புதிய ஆட்சியைக் கொண்டுவருவதற்காக நமக்கிடையே காணப்பட்ட கருத்து வேறுபாடுகளையும், கொள்கை வேறுபாடுகளையும் களைந்து எறிந்துவிட்டு ஓரணியில் திரண்டோம். புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு ஏனைய சமூகங்களும் பாடுபட்ட போதும், முஸ்லிம் சமூகம் நூற்றுக்கு 99 சதவீதம் ஒன்றுபட்டதை இந்த நல்லாட்சி அரசு என்றுமே மறக்கக் கூடாது.

எனினும், அதிகாரம் கிடைத்த பின்னர், பெரும்பான்மையின இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து சிறுபான்மை சமூகத்தின், குறிப்பாக மலையக முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம், அவர்களின் இருப்பு ஆகியவற்றை நசுக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் யதார்த்தமாக உணர்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிய சிறுபான்மை மக்களின் வாக்குப் பலமும், பதினேழு வருடங்களாக எதிர்க்கட்சியிலிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை, அக்கட்சியின் தலைவர் சந்திரிக்காவை பிரதமராக்கியதன் மூலம், ஆட்சிக்கு வித்திட வழிவகுத்த சிறுபான்மை மக்களின் வாக்குகளையும் மற்றும் பிரேமதாஸா, சந்திரிக்கா ஆகியோரை நாட்டுத் தலைவர்களாக்க உதவிய அதே சிறுபான்மை மக்களின் வாக்குகளையும், மீண்டும் பதினேழு வருடகாலமாக எதிர்க்கட்சியிலிருந்த ரணிலை, ஜனாதிபதி மைத்திரியை வெல்ல வைத்ததன் மூலமாக பிரதமராக்க வழிசசமைத்த சிறுபான்மை மக்களின், குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குப் பலத்தையும், பேரம் பேசும் சக்தியையும் தகர்த்தெறியும் வகையில் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைகின்றன.

இரண்டு பெரிய கட்சிகளும் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் சிறுபான்மையின மக்களின் வாக்குகளைச் செல்லாக்காசாக்க நினைக்கின்றன. இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பேரம்பேசும் சக்தியாக இருந்த முஸ்லிம்களின் வாக்குகளை தகர்த்தெறியவும் சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இடைக்காலத் தீர்வுத் திட்டத்தின் மூலம் வடக்கு – கிழக்கை இணைப்பதற்குத் திரைமறைவில் முயற்சிகள் இடம்பெறுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். இடைக்காலத் தீர்வுத் திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகள் முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வழங்க முடியுமென அப்போது கோரிக்கை விடப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிகவும் தைரியமாகவும், தனித்துவமாகவும் வழங்கிய தனது முன்மொழிவில், வடக்கும், கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென மிகவும் உறுதியாக தெரிவித்திருக்கிறது.

வடக்கிலே நான் பிறந்திருந்த போதும், வடக்கும், கிழக்கும் இணையக் கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கின்றேன். அதேநேரத்தில் மர்ஹூம் அஷ்ரபின் வியர்வையினாலும், தியாகத்தினாலும், முஸ்லிம்களின் அர்ப்பணிப்பினாலும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இடைக்காலத் தீர்வுத்திட்டத்தில் எந்தவொரு முன்மொழிவையும் வழங்கவில்லை எனவும், வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் “மதில் மேல் பூனையாக” இருந்து, முஸ்லிம்களுக்கு ஒரு கதையையும், தமிழ்ச் சகோதரர்களுக்கு இன்னுமொரு கதையைக் கூறி வருவதானது யாரை ஏமாற்றுவதற்காக? என நான் கேட்க விரும்புகின்றேன் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *