Breaking
Sat. Nov 23rd, 2024

(வை எல் எஸ் ஹமீட்)

sw
 
முஸ்லிம் காங்கிரசிற்கெதிரான குற்றச்சாட்டு

—————————————–
குற்றச்சாட்டு-2

 
உரிமை விடயங்களில் அசமந்தப்போக்கு

————————————–
இந்தக் குற்றச்சாட்டிலும் கணிசமான அளவு உண்மைகள் இல்லாமலில்லை.

அதிகாரப்பகிர்வு

—————
அதிகாரப்பகிர்வு விடயங்களில் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாடு மிகவும் கவலை தரக்கூடியதாக இருப்பதாக பல தடவைகள் நான் குறிப்பிட்டுள்ளேன்.

 ‘ சமஷ்டி’க்கு ‘ஒற்றையாட்சி’ என்ற பட்டாடையுடுத்தி மணப்பெண் சந்தையில் விற்பனைசெய்ய அரசு எடுக்கும் முயற்சிக்கு ரவூப் ஹக்கீம் துணைபோனது; ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். வட கிழக்கு இணைப்பு- பிரிப்பு விடயம் உட்பட பல விடயங்களில் அவரது நிலைப்பாடு விசனிக்கக் கூடியது. இவை தொடர்பாக ஏற்கனவே பல ஆக்கங்களை எழுதியிருக்கிறேன். இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்திலும் எழுத இருக்கின்றேன்.

துரதிஷ்டவசமான விடயம் என்னவென்றால் ஏனைய தேசிய மற்றும் அதற்குமேற்பட்ட தலைவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வட- கிழக்கு இணைப்பும் பிரிப்பும் மாத்திரமே! ” ரவூப் ஹக்கீம் வட கிழக்கு இணைப்பை ஆதரிக்கின்றார்;” என்பதும் இன்றைய இவர்களது பிரச்சாரத்தில் பிரதான பாகம் வகிக்கிறது. வேறு எதை, எதையெல்லாம் ஆதரிக்கின்றார்? அது தெரியாது. தெரிந்ததெல்லாம் இணைப்பு- பிரிப்பு எனவே அதைப் பேசுகின்றோம். நல்லவேளை, அவையும் புரிந்திருந்தால் தேர்தல் மேடைகள் கிழிந்திருக்கும். ரவூப் ஹக்கீம் தப்பினார்.

ரவூப் ஹக்கீமிற்கெதிரான இந்த இணைப்புப் பிரச்சாரம் எந்த அளவுக்கு என்றால் கடந்த சில தினங்களுக்கு முன் கல்முனையில் பேசிய “கறைபடியாத” கரங்களைக் கொண்ட ஒரு அமைச்சர் ‘ ரவூப் ஹக்கீம் வட கிழக்கு இணைப்பிற்கு உடன்பட்டு தமிழ்த்தரப்பினருடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகத்’தெரிவித்திருக்கின்றார்.

முழு நாடுமே முகம் சுழிக்கின்ற அவரது பட்டவர்த்தனமான ஊழல்களைப்பற்றி யாராவது பேசினால் உடனே அடியாட்கள் மூலம், ” அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள், உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா? நீதிமன்றில் நிரூபித்து விட்டீர்களா?” என்றெல்லாம் கேட்கத்தெரிந்த அந்த அமைச்சர் இவ்வாறான பாரதூரமான ஒப்பந்தத்தின் ஆதாரத்தை ஏன் வெளியிடவில்லை? அது எப்பொழுது, எங்கே கைச்சாத்திடப்பட்டது? அதன் உள்ளடக்கம் என்ன? அதில் கையொப்பம் இட்டவர்கள் யார்? என்ற தகவல்களை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை? அவர் அந்த ஆதாரத்தை உடனடியாக வெளியிடவேண்டும்.

அவ்வாறான ஒரு ஆதாரம் இருந்தால் இந்தத் தேர்தலையே மு கா விற்கு எதிராகத் திசைதிருப்பி விடலாம். கூட்டங்கள்கூட நடாத்தத் தேவையில்லை. அவ்வாறு ஆதாரம் இல்லையெனில் இந்தப்பொய்யை ஏன் கூறினார்? மக்களை மடையர்களாக்கி வாக்குச் சேகரிக்கவா? என்பதற்கு அவர் பதில் கூறவேண்டும். அவ்வாறாயின் அவரது மொத்த தேர்தல் பிரச்சாரமும் பொய்யை மூலதனமாகக் கொண்டுதான் செய்யப்படுகின்றதா? என்பதற்கும் அவர் பதில் கூறவேண்டும்.

அதேநேரம் வட கிழக்கு இணைப்புத் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை; என்று ஹக்கீம் தெரிவிக்கின்றார். அதற்குரிய நியாயமாக, வட கிழக்கு இணைப்பை பெரும்பான்மை சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை; எனவே, தமிழ் சமூகத்துடன் இந்த விடயத்தில் நாம் முட்டிக்கொள்ளத் தேவையில்லை; என்று கூறுகின்றார். இந்தக் கூற்றில் கணிசமான அளவு உண்மை இருந்தாலும் இந்நாட்டில் நூறு வீதம் நடக்காது; என்று எதையும் அறுதியிட்டுக்கூற முடியாது, என்பதையும் ரவூப் ஹக்கீம் மறந்துவிடக்கூடாது.

நேரடியாக, அரசியலமைப்பினூடாக வெளிப்படையான சரத்துக்கள் மூலம் வட கிழக்கு இணைக்கப்படாது; என்பதில் ஓரளவு நம்பிக்கை வைக்கலாம். ஆனால் தந்திரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கூடாக உடனடியாகவோ சற்று தாமதித்தோ வட கிழக்கு இணக்கப்படாது, என்று ரவூப் ஹக்கீமால் உத்தரவாதம் தரமுடியுமா?

இடைக்கால அறிக்கையில் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று குறிப்புகளை வைத்தே, இந்தியாவில் இருப்பதற்கும் மேலான முழுமையான சமஷ்டியை அரசு பிரேரிக்கின்றது; என்பதை இலகுவாக நிறுவலாம். அதை த தே கூ சமஷ்டி என்று ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, அரசு ஒற்றையாட்சியென்று பிரச்சாரம் செய்வதுபோல் தந்திரமாக வட கிழக்கு இணைப்புக்கான சரத்துக்களை உள்வாங்கினால் ஹக்கீமின் நிலைப்பாடு என்ன?

அதே நேரம் வட கிழக்கு இணைப்பிற்கு உடன்படுவதாயின் முஸ்லிம் தனி அலகுக்கு உடன்பட வேண்டும். இதற்குரிய முன்மொழிவை த தே கூ த்தான் செய்யவேண்டும்; என்கின்றார்.  அதேநேரம் அவர் ‘ நிலத்தொடர்பற்ற தனி அலகைக் குறிப்பிடுகின்றாரா அல்லது தென்கிழக்கைக் குறிப்பிடுகின்றாரா? என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றாரா? என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நிலத்தொடர்பற்ற தனிஅலகையே குறிப்பிடுகின்றார்; என்பது எனது ஊகம்.

த தே கூட்டமைப்பே அதற்குரிய முன் சமிக்ஞையை காட்ட வேண்டும்; என்பதன் மூலம் அவர்கள் இன்னும் அதற்கு உடன்படவில்லை. எனவே, இணைப்புக்கான சம்மதத்தை தாம் வழங்குவது சாத்தியமில்லை; என்று கூற வருகின்றாரா? எது எவ்வாறாக இருந்தபோதிலும் தனிஅலகுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடு; என்ற முடிவுக்கு எதனடிப்படையில் அவர் வந்தார்? அல்லது சாத்தியமற்ற நிலத்தொடர்பற்ற தனி அலகைப் பிரேரிப்பதன் மூலம் வட கிழக்கு இணைப்பிற்கு மறைமுகமாக, தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றாரா?

எது எவ்வாறானபோதிலும் வட கிழக்கு விவகாரம் அவரது தனிப்பட்ட பிரச்சினையல்ல அதில் மூடுமந்திரம் வைப்பதற்கு. பகிரங்கமாக தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பது ஆரோக்கியமற்றது; என அவர் கருதினால் அவரது கட்சி முக்கியஸ்தர்கள், மற்றும் சமூக ஆர்வம்கொண்ட சில புத்திஜீவிகளையாவது அழைத்து அவரது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
( தொடரும்)
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *