அரசியல்வாதிகளின் உத்தரவு மற்று ஆலோசனையின் படி கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய 8 இராணுவத்தினர் தாஜூடீனை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கி கொலை செய்து, அவரது காருக்கு போட்டு எரியூட்டியுள்ளமை சம்பந்தமாக பல சாட்சியங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய உயர் மட்ட அரசியல்வாதி ஒருவரின் சாரதியாக பணியாற்றிய இராணுவ அதிகாரியே தாஜூடீன் கொலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாஜூடீனின் மரணம் கொலை என்பதால், அந்த கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் கடந்த 25 ஆம் திகதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
தாஜூடீன் விபத்து காரணமாக இறந்ததாக கடந்த அரசாங்கத்தின் கீழ் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நடத்திய விசாரணைகளில் தாஜூடீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாரதியாக பணியாற்றிய மேஜர் திஸ்ஸ என்பவரே இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.