Breaking
Mon. Nov 25th, 2024

(ஊடகப்பிரிவு)

தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக, அந்த மக்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்க காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், சமாதான சூழ்நிலையில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்களுக்கான காணி உரிமங்களை வழங்குமாறு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த தொடர்ச்சியான எழுத்துமூல கோரிக்கைகள், சந்திப்புக்கள் மற்றும் வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு தேர்தல் திணைக்களத்திடம் விடுத்த வேண்டுகோள் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவையின் போது, அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளையடுத்தே காணிச் சீர்திருத்த ஆணைக்குழு இந்த துரித வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கான பணிகள், அநுராதாபுர காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகத்தினால் இற்றைவரை மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த மாதம் தொடக்கம், அந்த இரண்டு மாவட்டங்களுக்குமான கோவைகள் யாழ்ப்பாணம் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு பாரப்படுத்தப்பட்டிருந்ததை அடுத்தே, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியில் குடியிருக்கும் மக்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பியரில் மீளக்குடியேறியுள்ள மக்கள் விண்ணப்பப் படிவத்தினை கிராம சேவையாளரிடம் பெற்று, அதனை உரிய முறையில் நிரப்பி சம்பந்தப்பட்ட கிராம சேவையாளரிடம் உடன் சமர்ப்பிக்குமாறு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தக் காணி உரிமங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 2010/ 06/ 23 ஆம் திகதியும், 2011/ 02/ 10 ஆம் திகதியும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவாவுக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தமையும், அதன் பின்னர், வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான ஜனாதிபதி செயலணியிடமும் கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தச் செயலணி காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்னர் வலியுறுத்தி இருந்தது.

இதேவேளை, இந்தக் காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுத்தருவதாக தனிப்பட்ட எவரும் வாக்குறுதி அளித்தால், அவரை நம்பி ஏமாற வேண்டாமெனவும், இது தொடர்பான தகவல்கள், உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் தலைமன்னார் பிரதேச பள்ளிவாசல் தலைவர்களைச் சந்தித்து, அவர்களின் ஆலோசனைகளுடன் கிராம சேவகரை அணுகுமாறு மீளக்குடியேறிய மக்கள் வேண்டப்படுகின்றனர்.

அத்துடன் காணி உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வாக்காளர் இடாப்பில், குடியிருப்பாளர்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *