வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து நடத்தும் கலாச்சார விழாவில் விருது வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட தெரிவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து நடத்தும் மாவட்ட மட்ட கலாச்சார விழா நாளை நடைபெறவுள்ளது.
இதில் விருது வழங்குவதற்காக பல்வேறு துறைகளின் கீழ் பலரும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தெரிவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இவ் விருதுகள் 20 – 40 வயது பிரிவு, 41- 59வயது பிரிவு, 60 வயதிற்கு மேல் என வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் மூன்று வயது பிரிவுகளின் கீழ் விருதுக்கான பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், ஒரு சில துறைகளில் தகுதியானவர்கள் இருந்தும் குறித்த வயதுப்பிரிவுகளில் உள்வாங்காது ஒரு வயது பிரிவில் மாத்திரம் சில துறைகளை தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் சிலருக்கு விருதுக்கான விண்ணப்பங்கள் கூட முறையாக வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் விண்ணப்ப படிவத்தில் கோரப்பட்ட பிரதிகள் இணைக்கப்பட்ட போதிலும் தற்போது வேறு ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என சாக்குப்போக்கு தெரிவிக்கப்படுவதாகவும் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச கலாச்சார உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளதுடன், மாவட்ட, பிரதேச கலைஞர்களை தெரிவு செய்யும் போது சரியான முறைகளை பின்பற்ற வேண்டும்.
அதுவே உண்மையான கலைஞர்களுக்கு வழங்குகின்ற கௌரவமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக பிரதேச கலாச்சார உத்தியோகத்தரிடம் கேட்டபோது சில தெரிவுகள் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தரே தெரிவு செய்தமையால் அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.