வடக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், விக்கினேஸ்வரனும் வடமாகாண சபையினரும் மட்டுமே இன்று வடக்கின் பாதுகாப்பை தீர்மானிக்கின்றனர்.வெகுவிரைவில் மீண்டும் புலம்பெயர் புலிகளின் ஆதிக்கம் தலைதூக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மக்கள் பொறுமையாக இருந்தால் புலிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் உச்சகட்டத்திற்கு வந்துவிடும். ஆகவே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடவேண்டும். விரைவில் மீண்டுமொரு பொதுத் தேர்தலுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் பொது எதிரணியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நாட்டை மிகவும் மோசமான பாதையில் கொண்டு சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் முழுமையாக மோசமான நிலையில் உள்ளது. பொருட்களின் வரி இருமடங்கு அதிகரித்து சென்றுள்ளது. இன்றைய நிலையில் விலை குறைக்கவேண்டிய பொருட்கள் அனைத்திற்கும் இருமடங்கு வரி அதிகரித்து மக்களின் வயிற்றில் நெருப்பை கொட்டியுள்ளனர். மக்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்திகளையும் நன்மைகளையும் உணர ஆரம்பித்துள்ளனர். கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் இன்று காற்றில் பறந்துவிட்டன.
இன்று மஹிந்தவை ஆதரித்த மக்களை விடவும் நல்லாட்சியை ஆதரித்த மக்களே அரசாங்கத்தை அதிகம் வெறுக்கின்றனர். இன்று மக்களின் வெறுப்பையும் கோபத்தையும் கண்டு சிறிசேன ரணில் அரசாங்கம் அஞ்சுகின்றது. உண்மையில் மக்களை கண்டு இவர்கள் அஞ்சவில்லை என்றால் உடனடியாக தேர்தலை நடத்திக் காட்டுங்கள். இப்போது தேர்தலை நடத்தினால் இவர்களின் பொய்கள், ஏமாற்று வேலைகள் அனைத்தும் வெளிப்பட்டுவிடும் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் பொய்யான காரணங்களை காட்டி தேர்தலை பிற்போடுகின்றனர்.
வடக்கில் இன்று என்ன நடக்கின்றது என்பது சிங்கள மக்களுக்கு தெரியவில்லை. தமிழ் பிரிவினைவாதம் இன்று தலைதூக்குகின்றது, தற்கொலை குண்டுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இன்று வடக்கில் பாதுகாப்பு இல்லை. இராணுவமோ, புலனாய்வு பிரிவின் செயற்பாடுகளோ இல்லை. இன்று வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், விக்கினேஸ்வரன் வடமாகாண சபையும் மட்டுமே வடக்கின் பாதுகாப்பை தீர்மானிக்கும் தரப்புக்கள். இவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பு இருக்கையில் நாடு அச்சுறுத்தல் இல்லையென பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார் . இது தொடர்பில் விசாரணைகள் இல்லை ஆனால் ஜி.எல் பீரிஸ் சில காரணங்களை கூறியதற்காக அவரை விசாரிக்கின்றனர்.
நாட்டில் நடக்கும் பிரிவினைவாதம் நிறுத்தப்படாது புலம்பெயர் புலிகளின் தேவை சரியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மறுபுறம் எமது புலனாய்வு பிரிவின் முக்கிய சிலர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஐ.நா விசாரணையாளர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர், இலங்கையில் நடக்கவிருக்கும் விசாரணைகள் தொடர்பில் சரியாக ஆதாரங்கள் உருவாக்கபடுகின்றன. ஆனால் இந்த விவகாரங்கள் தொடர்பில் அனுரகுமார, சம்பந்தன் ஆகியோருக்கு தெரியவில்லை.
இந்த நிலைமை மாறவேண்டும். ஆனால் அதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க முடியாது. மக்கள் பொறுமையாக இருந்தால் புலிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் உச்சகட்டத்திற்கு வந்துவிடும். ஆகவே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடவேண்டும். விரைவில் மீண்டுமொரு பொதுத் தேர்தலுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும். அப்போதுதான் நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை உருவாக்கவும் தேசிய தாதுகாப்பை பலப்படுத்தவும் முடியும் என்றார்.