Breaking
Sun. Nov 24th, 2024
(ஷிபான் பீ.எம்)
நான் வரையும் மடல் உங்களைச்சார்ந்த சகாக்களினால் உங்களிடம் எத்தி வைக்கப்படும் எனும் அசட்டு தைரியத்தினால் வரைகிறேன். இந்த மழை மாரி காலமே இதற்குப்பொருத்தம் எனவும் நினைக்கின்றேன்.

தலைவரே, தாங்கள் இந்த நிமிடம் வரை முழு இலங்கைக்குமான முஸ்லிம் மக்களின் அரசியல் தலைவர் என்ற கிரீடத்தினை சூடிக்கொண்டவர். அதிலும் குறிப்பாக கிழக்கு மக்களின் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சை லாவகமாக தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சாணக்கியர் என்பதிலும் மாற்றுக்கருத்துக் கிடையாது.

கடந்த நல்லாட்சியின் பங்காளிகள் நீங்கள் என மார்பு தட்டிக்கொண்ட வரலாற்றையும் நாம் இன்னும் மறக்கவில்லை. அதன் பின்னரான பாராளுமன்றத்தேர்தலில் நீங்கள் யானைச்சவாரி வந்து நான்கு உறுப்பினர் பெற்றுக்கொண்டதும் வரலாறு.

ஆனால், நான்கில் ஒன்றாக மிளிரும் தயா கமகேயினால் அம்பாரைக்கு செய்யப்படும் அபிவிருத்தியில் துளியளவும் மற்றைய மூவரினாலும் ஆக்கபூர்வமான அபிவிருத்திகள் செய்யப்படுவதில்லை என்பதே குற்றச்சாட்டு. அதற்கான வழிப்படுத்தல் தலைவரான உங்களிடம் இருந்து செல்கிறதா ? இல்லையா ?என்பதனையும் அறிய ஆவல்.

இங்குள்ள படம் உணர்த்துவது அம்பாரையில் நல்லாட்சியில் கட்டி முடிக்கப்பட்டு விழாக்கோலம் பூணக்காத்திருக்கும் பஸ் தடிப்பு நிலையமும்,  முஸ்லிம்கள் எமது முகவெற்றிலையாக இருக்கும் கல்முனை பஸ்நிலையமும் ஆகும். இது தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகிறோம்.

தகுந்த திட்டமிடலின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட நமது கல்முனை பஸ் நிலையம் குன்றும் குழியுமாகி , வெள்ள நீர் தேங்கி சகதிக்கூடமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையும், பிரயாணிகள் கழிவறை வசதி கூட இல்லாமல் தத்தளிப்பதனையும், கடையறைகள் கட்டாக்காலி விலங்குகளின் வாழ்விடமாகி ஜனரஞ்சகமற்ற பேர்ப்பலகை தாங்கிய பாழ் பங்களா போன்று காட்சி தருவதனைக்காண நெஞ்சு பொறுக்குதில்லை.

அடிக்கடி இந்த வீதியால் செல்லும் அரசியல் தலைவனுக்கு கண்ணுக்குள் கரிப்பது போன்று உங்களுக்கு கல்முனை கரிப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம் நீங்கள் தேர்தல் காலமோ, திறப்பு விழாக்களோ, மரண வீடுகளுக்கோ அன்றி வேறொன்றுக்குமாக இங்கு வருவதற்கு நியாயமும் இல்லை.

தலைவரே, நீங்கள் அடிக்கடி உச்சரிக்கும் துபாயாக எமது கல்முனையை இப்போதைக்கு மாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் அம்பாரையில் உள்ளதனைப்போலாவது இந்த பஸ் நிலையத்தை மீளமைத்துத்தாருங்கள். ஆட்சி மாற்றத்தின் பங்காளியாக நீங்கள் இருந்தமைக்கான சுவடாக கல்முனை பஸ் நிலையமாவது திகழட்டும்.

இது தேர்தல் காலமாகையால், காற்றில் கலந்து பஞ்சாய்ப்பறக்கும் பொய் வாக்குறுதியாக, கல்முனை பஸ் தரிப்பு நிலையத்துக்கான வாக்குறுதியை கடனுக்காக வழங்காமல் , கூடிய சீக்கிரம் கட்டி முடித்து விழாக்கோலம் பூணி ,கிழக்கின் கிரீடமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் பஸ் நிலையமாக கல்முனை பஸ் நிலையத்தினை மாற்றியமைத்துத் தரும்படி தயவாய் வேண்டுகின்றேன்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *