இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள நிலையில் வட மாகாணத்தில் அரச பேருந்து சேவை ஸதம்பிதம் அடைந்துள்ளது.
வட பிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள பேருந்து சேவை ஸ்தம்பிதத்தால் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை என்பதுடன், அங்கு பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்திலுள்ள மூன்று அரச பேருந்து சாலைகளின் பேருந்து சேவைகள் எதுவும் இன்று இடம்பெறவில்லை என்பதுடன், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான எவ்வித அரச சேவைகளும் யாழிலிருந்து இடம்பெறவில்லை.
அத்துடன் யாழ். மாவட்ட அரச பேருந்து ஊழியர்கள் அனைவரும் யாழ். பிரதான பேருந்து நிலையத்தில் கூடி தமது எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.