வட, கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறியவர் அந்த ஆறு எந்த இடத்தில் இருந்து ஊற்றெடுக்கும், அது எங்கு சென்றடையும் போன்றவற்றையும் கூறவேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வட, கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு நேற்றைய தினம்(12) பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இதனை சரியாக கூற அவருக்கு தெரியாது, காரணம் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி அல்ல என்றும் கூறியுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவராக இருந்திருந்தால் தற்போதைய அரசியல் நிலையினை கருத்தில் கொண்டு பொறுப்புவாய்ந்த கருத்துக்களை வெளியிட்டிருப்பார்.
அமைச்சர் அவர்களே நீங்கள் மஹிந்த ஆட்சி காலத்தில் நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் இடங்கள் பலவற்றில் இரத்த ஆறு ஓடியபோது அதற்கு வாய்க்கால் வெட்டிகொடுத்தவரல்லவா?
அவ்வாறானதோர் ஆட்சியாளர் இலங்கைக்கு மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை திரட்டியவர். மக்களோ உங்களை கருத்திலேடுக்காது தற்போதைய ஜனாதிபதிக்கே வாக்களித்தனர்.
இதிலிருந்து நீங்கள் பாடம் கற்கவில்லையா? இவ்வாறு சுயநல அரசியல் செய்யும் நீங்கள் தற்போது திடிரென்று இவ்வாறான கருத்தினை வெளியிடுவதன் நோக்கம் என்ன என்றும் கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிசன்னா இந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.