“சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச சபைக் கோரிக்கையானது அரசியல் தலைமைத்துவங்களின் தேர்தல் கால பொய் வாக்குறுதிகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பிரச்சினை. இதன் பொறுப்பினை அரசியல் தலைமைத்துவங்களே ஏற்க வேண்டும். இந்த விடயத்தை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றினைந்து முன்னெடுக்க வேண்டும்” – என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதேவேளை, சாய்ந்தமருது பெரிய பள்ளிவசால் தலைவர் அல்ஹாஜ் ஹனீபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர், ஆர்ப்பாட்டங்கள் மூலமல்லாது கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள தம்முடன் ஒன்றினைந்து செயற்பட முன்வருமாறும் கோரிக்கை விடுத்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:
சாய்ந்தமருது பிரதேச சபை என்பது இன்று நேற்றுள்ள பிரச்சினை அல்ல. அது நீண்ட நாட்களாக உள்ள ஒரு பிரச்சினை. தேர்தல் காலங்களில் அரசியல் சுயலாபங்களுக்காக அரசியல் தலைமைத்துவங்கள் வழங்கிய வாக்குறுதிகளின் வெளிப்பாடே இன்றைய நிலைக்கு காரணம். இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கு உள்ளது. ஆனால், அது இதனை தீர்த்து வைக்காது இவ்வளவு காலம் இழுத்தடிப்பு செய்துள்ளது. இறுதியில் இந்த விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலையிட்டதால் அது அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
இரண்டு கட்சிகளினதும் தலைமைத்துவங்களுக்கிடையில் உள்ள அரசியல் ரீதியிலான பிரச்சினை இன்று ஒரு சமூகம் வீதியில் இறங்கி போராடுகின்ற அளவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
அத்தோடு, இரண்டு முஸ்லிம் ஊர்களுக்கிடையில் பகைமையும் இது ஏற்படுத்தியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
புதிய அரசியலமைப்பு திருத்தம், மாகாண சபை எல்லை நிர்ணயம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சமூகம் இவ்வாறு வீதியில் இறங்கி போராடுவது மிகவும் மன வேதனையான விடயமாகும். மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் இருந்திருந்தால் ஒரு தொலைபேசி அழைப்பில் தீர்த்து வைக்கும் விடயமாக இது அமைந்திருக்கும்.
இந்த விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருடன் கலந்தாலோசித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் முயற்சிகளை செய்து வருகின்றேன். என்றார்.