(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
மிக நீண்ட காலத்துக்கு முன்பு சர்ச்சைக்குரிய விடயமாக காணப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாக பிரிக்கும் கதையாடலை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தூக்கிப் பிடித்திருந்தார். அதனை சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் குறிப்பிட்டிருந்தார். இருந்த போதிலும் சம்மாந்துறை மக்கள் ஒரு போதும் அப்படியான ஒரு கோரிக்கையை முன் வைத்ததில்லை.
இது தொடர்பான எனது சுட்டிக் காட்டலை தொடர்ந்து விவாதம் சூடு பிடித்தது. கருத்துக் கணிப்புக்கள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஞாயிற்றுக் கிழமை வீதி புனரமைப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், தான் முன்பு கூறிய சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாக பிரிக்கும் கதையாடலை விடுத்து சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அவரது குறித்த பேச்சு இன்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் கரு ஜெயசூரிய காலம் தொட்டு முன் வைத்து வந்த சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாக பிரிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டாரா என சிந்திக்க தோன்றுகிறது.
அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறையை நகர சபையாக்குதல் தொடர்பில் அதிகம் சிலாகித்து வருகிறார். சம்மாந்துறையை நகர சபையாக்குதலுக்கான முயற்சிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தானே செய்தேன் என கூறுதலே இந்த சிலாகித்தலுக்கான பின்னணியாக இருக்கலாம்.
இருந்த போதிலும் அவர் முன்னர் கூறியிருந்த இரு சபைகள் கதையை தொடர்வாராக இருந்தால் அந்த பெயர் பெறுதல் அவருக்கு பகற் கனவாக அமையும். இதனை உணர்ந்து தான், தனது பேச்சை இப்படி அமைத்திருக்க வேண்டும்.