Breaking
Mon. Nov 25th, 2024

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அகற்றுவதே எமது நோக்கம், இன மதங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல என வவுனியாவில் போராட்டத்தினை முன்னெடுத்து வரும் தமிழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பள்ளிவாசளை அண்மித்த  வியாபார நிலையங்களை அகற்றக்கோரி இன்று காலை வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1995ஆம் ஆண்டு 16 வியாபார நிலையங்களுக்கு அப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 80இற்கும் அதிகமாக வியாபார நிலையங்கள் நடைபாதையிலும் பள்ளியை அண்மித்த பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா நகரசபையில் முன்னர் ஆட்சிபுரிந்த அரசியல் பிரமுகர்கள் இதற்கு அனுமதியளித்துள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் குறிப்பாக வீதி அதிகாரசபையிடம் வினவியபோது அரசியல் தலையீடு காரணமாக முன்னர் அவற்றை அகற்ற முடியவில்லை என குறிப்பிட்டனர்.

எனினும், நடைபாதையில் வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரிக்கை விடுப்பதுடன், அகற்றும் வரை எமது போராட்டத்தினை தொடருவோம் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர். தயாபரன் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
இச்சம்பவம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபையிடமே உள்ளதாகவும் இவ்விடயமாக தலையிடுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை, ஆனால் இன்று இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக வீதி அதிகாரசபையினருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் கடிதம் ஒன்றினை அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்ட இளைஞர்களால் நகரசபை செயலாளருக்கு  அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *