திருகோணமலை – மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் நேற்றைய தினம்(24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாட்டின் உணவு உற்பத்தியில் கிழக்கு மாகாணமானது பாரிய அளவு ஆதிக்கத்தினை செலுத்தி வருகிறது.
விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்பு ஆகிய துறைகளில் நாடளாவிய ரீதியில் கிழக்கு மாகாணம் 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைத் தக்கவைத்துள்ளது.
இது இவ்வாறிருக்க குறித்த துறைகளை பாதிக்கும் வகையிலான பல நடவடிக்கைகள் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக தடைசெய்யப்பட்ட வலைகளைக்கொண்டு மீன் பிடியில் ஈடுப்படுவதனால் கடலில் மீன்வளம் குறைவடைகிறது. மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.
இது கிழக்கு மாகாணத்திலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, புகையிரதத்தின் மூலம் மணல் போக்குவரத்தினை மேற்கொள்வதால் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் ஆளுனர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.