(ஊடகப்பிரிவு)
இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, நாளை (24.10.2017) கட்டார் நாட்டுக்கு பயணமாகும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இணைந்துகொள்கின்றார்.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், முதலீடு, உல்லாசத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை மேம்படுத்தல் மற்றும் இன்னோரன்ன விடயங்களை நோக்காகக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த தூதுக்குழுவின விஜயத்தின் போது, வர்த்தக மேம்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை – கட்டார் நாடுகளினது வர்த்தகம் மற்றும் முதலீட்டு சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாடுகளைச் சார்ந்த உயர்மட்ட வர்த்தகர்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்றிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். டோஹாவிலுள்ள ஷெராட்டன் கிரான்ட் சம்மேளன மண்டபத்தில் இடம்பெறும் இந்தக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து முக்கிய வர்த்தகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
கட்டார் அரசின் முக்கிய தலைவர் ஒருவரும் இந்தக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.
இந்தக் கூட்டத்தை அடுத்து வர்த்தகர்களின் செயலமர்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சம்மேளன அதிகாரி மேலும் தெரிவித்தார்.