நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 300 கோடி ரூபா நிதிமோசடி தொடர்பில், இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவிற்கு செல்ல தாம் தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தங்காலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதிக்கு அமைய, இரண்டரை இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி கொள்வனவுசெய்யப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் விற்பனை செய்யப்படும் அரிசியின் தொகை விலையிலும் பார்க்க 9 ரூபாய் அதிக விலையில் இந்த அரிசி கொள்வனவு செய்யப்பட்டது.
இதன்மூலம் 300 கோடிக்கும் அதிகமான நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பிலான விசாரணை அறிக்கையை கோப்குழு சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
எனவே இது தொடர்பில் தாம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்ல தயாராகிவருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.