சட்டத்தரணியாக இருந்து கொண்டு
ஒன்றைக்காட்டி இன்னொன்றுக்கு
எம்மிடம் கையொப்பம் பெற்று விட்டார்கள் என ஏமாளித்தனமாக
கூறும் ஒரு தலைமையிலான
முஸ்லிம் காங்கிரசை இன்னமும் முஸ்லிம்கள் நம்ப முடியுமா என
உலமா கட்சித்தலைவர்
கேள்வி எழுப்பினார்.
கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள்
திருத்த சட்ட மூலம் சம்பந்தமாக தமக்கு காட்டப்பட்டது வேறு என்றும் தலையில் கட்டியது வேறு என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ரவூஃப் ஹக்கீம் கூறியுள்ளமை
வெட்கக்கேடான ஒன்றாகும்.
ஒரு சட்டத்தரணியாக இருந்து கொண்டு 18 வருடங்களுக்கு மேல்
பாராளுமன்ற உறுப்பினராக அனுபவம் பெற்ற ஒருவர் இவ்வாறு தான் ஏமாந்துவிட்டதாக
சொல்வது ஒன்றில் இவர் மிகப்பெரிய
முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது இவ்வாறு தெரியாத்தனமாக
நடந்து விட்டது என சமூகத்தை ஏமாற்ற பொய் சொல்வதாகவே
இருக்க வேண்டும்.
பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே கவுடன் மிக நெருங்கிய
விசுவாசியாக ஹக்கீம் இருந்தும்
இவ்வாறு ஏமாந்து விட்டதாக சொல்வதன் மூலம் ரணில் விக்ரமசிங்க, ஹக்கீமை
ஏமாற்றி விட்டாரா அல்லது ஹக்கீம்
வழமையாக சொல்வது போல் கண்ணை திறந்து கொண்டே
குழியில் விழுந்து விட்டாரா அல்லது
கோடிகளை வாங்கிக்கொண்டு
சமூகத்திடம் பொய் சொல்கிறாரா
என்பதை முஸ்லிம் மக்கள் சிந்திக்க
வேண்டும்.
ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரசை
சேர்ந்தவர்களும் இவ்வாறெல்லாம்
சொல்வது எமக்கு என்றும் புதியதல்ல. 2001ம் ஆண்டு முதல்
இப்படித்தான் சொல்லி பிழைப்பு
நடத்திக்கொண்டிருக்கிறார். 2001ம் ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற
பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்
தனித்தரப்பாக போகும் படி நாம் சொன்ன போது அதனை
மறுத்து அமைச்சு பதவியை தக்க
வைப்பதற்காக அரச தரப்பாக சென்றதுடன் ரணில் அரசு மீது
தமக்கு நம்பிக்கை இருப்பதாக ஹக்கீம் கூறினார்.
இதன் காரணமாக அன்று காத்தான்குடியில் நடை பெற்ற கிழக்கு மாகாண ஜம்மிய்யதுல்
உலமாவின் கூட்டத்தில் உரையாற்றும் போது தனித்தரப்பை நிராகரிக்கும்
ஹக்கீமின் செயல் முஸ்லிம்
சமூகத்துக்கு செய்யும் துரோகமாகும் என பகிரங்கமாக கூறினேன். அன்று
நான் சொன்னதைக்கேட்டு
இந்த சமூகம் விழித்திருந்தால் இன்று தங்கையை காட்டி அக்காவை கட்டி
வைத்து விட்டார்கள் என்பது போல் ஹக்கீம் புலம்புவதை பார்த்துக்கொண்டிருக்கும் கேவலம் முஸ்லிம் சமூகத்துக்கு வந்திருக்காது.
தற்போது சொல்வது போன்றுதான்
மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் 18வது திருத்தம், திவிநெகும சட்டமூலம் என்பவற்றுக்கு ஆதரவளித்து விட்டு முட்டாளாகி விட்டோம் என்றார். இவர்
முட்டாளாகிக்கொண்டிருக்கிறார்
என்பதற்காக முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக வேண்டுமா? ஆகவே தொடர்ந்தும் தன்னை முட்டாள் என
உறுதிப்படுத்தும் தலைமையும் அதற்கு துணை போகும்
கொள்ளைக்கூட்டத்தையும்
கொண்ட கட்சி இலங்கை முஸ்லிம்களுக்கு குறிப்பாக கிழக்கு
முஸ்லிம்களுக்கு இன்னமும் தேவையா என்ற தீர்மாணத்துக்கு மக்கள் வர வேண்டும்.
இல்லையேல் இந்தக்கட்சியால்
முஸ்லிம் சமூகம் இன்னும் பல
இழப்புக்களை சந்திக்க வேண்டி வரும்
என்பதை உலமாக்கள் தலைமையிலான கட்சி என்ற வகையில் சொல்லிக்கொள்கிறோம்
என முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
கூறினார்.