Breaking
Wed. Nov 27th, 2024
(அமைச்சின் ஊடகப்பிரிவு)
வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் வன பரிபாலன அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலையில் இன்று காலை (21.10.2017) இடம் பெற்ற “நிலமெஹவர” ஜனாதிபதி நடமாடும் சேவையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

அமைச்சர் அங்கு கூறியதாவது:

எங்கேயோ இருக்கும் மதகுரு ஒருவர் ஒவ்வொரு நாளும் புதுப்புது பொய்களைக் கூறி இந்த மக்களின் பூர்வீகக் காணிகள் தொடர்பில் முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்து மக்களை குழப்பி வருகின்றார். இதன் மூலம் கலவரங்களைத் தூண்டும் வகையில் அவர் செயற்பட்டு வருகின்றார்.

ஆனால், இந்தப் பிரதேசங்களைச் சார்ந்த பௌத்த மதகுருமார் உட்பட ஏனைய மதகுருமார்களுக்கு இதன் உண்மைத் தன்மையும், யதார்த்தமும் விளங்கும். 30 வருடங்களாக மக்கள் வாழாததால் காடாகிப் போன இந்த பிரதேசங்களை வைத்து இவர்கள் தொடர்ச்சியாக ஆடி வரும் நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுங்கள்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டம் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் பிரதேசம். யுத்த காலத்தில் கூட மூவின மக்களையும் சேர்ந்த மதகுருமார் தமது உயிரையும் துச்சமாக மதித்து எங்களுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றி இருக்கின்றார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களின் வெற்றிக்காக நீங்களும் பிரதமரும் தனித்தனியாக இந்த பிரதேசத்துக்கு வந்து மக்கள் ஆணை கேட்ட போது நாமும் உங்கள் இருவருடனும் இணைந்து பிரசாரங்களை மேற்கொண்டு உங்கள் வெற்றிக்காக பாடுபட்டோம். இந்த பிரதேச மக்கள் தாம் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என உங்களை நம்பி வாக்களித்தனர்.

அதன் பிரதிபலனை பெற்றுக் கொள்ளும் நாளாக இன்றைய நாளை நாங்கள் பார்க்கின்றோம். இந்த வரலாற்று நிகழ்வில் காணிப்பிரச்சினை கல்விப் பிரச்சினை, பாதைப் பிரச்சினை ஆகிய பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தந்து நீங்கள் தேர்தல் காலத்தில்; நீங்கள் வழங்கிய வாக்குறுதியை இன்று நிறைவேற்றியமைக்கு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன். அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றோம்.

சுதந்திரத்துக்குப் பின்னரான சுமார் 30 வருட காலப்பகுதியில் பேரழிவுகளையும் அவலங்களையும் சந்தித்து நிம்மதியிழந்து தவித்திருக்கின்றோம். நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்ட சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கிராமங்கள் வனவளத்துக்கு உரித்தாக்கப்பட்டிருக்கின்றன. அந்த அமைச்சுக்கு தாங்கள் பொறுப்பாய் இருந்ததனால் ஒரு நகரத்தை வடுவித்து 1200 பேருக்கு இன்று காணியுறுதிகளை வழங்கியிருக்கிறீர்கள்.

இந்த மாவட்டத்தில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான செட்டிகுள பாதை எத்தனையோ வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இன்னும் புனரமைக்கப்படாத நிலையும், வவுனியா மன்னார் வீதி இன்னும் செப்பனிடப்படாத நிலையும் காணப்படுகின்றது. இவற்றுக்கும் நீங்கள் தீர்வு பெற்றுத் தர வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினரான நாங்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ ஆசைப்படுகின்றோம். எனினும் அந்த ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயற்பாடுகள் குறித்து மனக்கவலை கொண்டுள்ளோம்.
உங்கள் தலைமையிலான அரசாங்கத்தில் இந்த மாவட்டத்தில் எல்லா துறைகளிலும் நிறைய ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்காக மீண்டும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான வஜிர அபேவர்தன, டி.எம்.சுவாமிநாதன், கயந்த கருணாதிலக, பிரதமரின் செயலாளர் சமன் எகநாயக்க, குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சுமந்திரன், விஜயகலா மகேஷ்வரன், அப்துல்லா மஹ்ரூப், சார்ல்ஸ் நிர்மலநாதன், சாந்தி, மாகாண சபை உறுப்பினர்களான சிவகோமன், சத்தியலிங்கம், தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் ஆசாத் சாலி, கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, வடமாகாண ஆளுநர் உட்பட பலர் பங்கேற்றனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *