Breaking
Tue. Nov 26th, 2024

(சுஐப் எம்.காசிம்)

இந்தியாவில் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து அங்கு 26 சதவீதமான வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இரண்டு சதவீத்துக்கு குறைவாக மாற்றியமைத்தது போல இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைப்பதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார்.

மக்கள் காங்கிரசின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் கட்சிக் கினை புனரமைப்புக் கூட்டமும் கண்டியில் இன்று காலை (18) இடம்பெற்ற போது உரையாற்றிய

அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி மைத்திரியையும் பிரதமர் ரணிலையும்; ஆட்சிக்கு கொண்டு வருவதில் முன்னின்று உழைத்த முஸ்லிம் சமூகத்தை இந்த நல்லாட்சி ஏறெடுத்தும் பார்க்காமல் எட்டி உதைய நினைக்கின்றது. அதே போல தமது வாழ்நாள்முழுவதும் ஆட்சியிலிருந்து தாம் விரும்பியதையெல்லாம் மேற்கொள்ள முடியுமென்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருந்த கடந்த ஆட்சியின் தலைவரை வீட்டுக்கு அனுப்பிய முஸ்லிம் சமூகத்தை அந்தத் தலைவரே இப்போது அரவணைத்து, அன்பு காட்டி, உபசரிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதுதான் கால மாற்றத்தின் ஓட்டம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்து விட்டோம் என்ற மமதையிலும் அதிகார வெறியிலும் முஸ்லிம்களை அலட்சியப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப எமது சமூகம் நிர்ப்பந்திக்ப்படட்டது.

அபிவிருத்திப் புரட்சிகளையும் பொருளாதார மேம்பாட்டையும் யுத்தங்களையும் வென்ற ஜப்பான், மலேசியா, துருக்கி போன்ற நாடுகளின் தலைவர்கள் ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பது போல மஹிந்தவும் இருப்பாரென சிங்கள சகோதரர்கள் அனைவரும் நம்பி இருந்தனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராமங்களின் வீடுகளிலே முன்னாள் ஜனாதிபதியின் படங்களை கொளுவிக் கடவுள் போல அவரை பூசிக்கப்பட்ட வரலாறு இருந்தது.
முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாத்தையும் புனித குர்ஆனையும் தூஷித்த, பொது பல சேன இயக்கத்தினரின் காட்டுமிராண்டித் தனங்களை அடக்காமல் அமைதியாக இருந்து பாரத்துக்கொண்டிருந்த அந்த ஆட்சியை நாங்கள் வீட்டுக்கு அனுப்பினோம்.

முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயங்கள் இழைக்கப்பட்ட போது அரசிலிருந்த நாங்கள் தட்டிக்கேட்காமல் கைகளைக்கட்டிக்கொண்டு பெட்டிப்பாம்பாக, பேசாமடைந்தைகளாக இருந்ததாக நீங்கள் நினைத்திருக்கலாம்.
நாங்கள் மஹிந்தவிடம்; சென்று அவற்றைத் தட்டிக்கேட்ட போது எம்மீது சீறிப்பாய்ந்த பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. வாக்கு வாதம் முற்றி, வெகுண்டெழுந்து அந்தத் தலைவர் அறையைவிட்டு வெளியேறிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. தற்போதைய அரசாங்கம் இந்த இரண்டரை வருட காலத்தில் எமது சமூகத்துக்காக எதையும் செய்ததென்று எவரும் மார்தட்டிச் முடியாது.

கடந்த அரசில் எங்களுடன் ஒரே அமைச்சரவையிலிருந்த மைத்திரியையும் இனிமேல் பிரமராக வருவோமா என நினைத்தம் பார்க்காத? ரணிலையும் ஆட்சிக்குக் கொண்டுவந்து அலங்கரித்ததன் பிரதிபலன்களை இன்று படிப்படியாக அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். எந்தவொரு காலத்திலும் சேர்ந்துகொள்ள முடியாத இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளை ஒரே தளத்துக்கு கொண்டு வந்து ஆட்சியமைக்க வழிசமைத்த நமது முஸ்லிம் சமூகத்தை செல்லாக் காசாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்து நமது சமூகத்தை கருவறுக்கும் முயற்சிகள் இடம்பெறும் அதேவேளை புதிய அரிசியலமைப்பை அவசர அவசரமாகக் கொண்டு வந்து இன்னுமொரு சமூகத்தை திருப்திப்படுத்துவதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.

எமது சமூகத்துக்கான அபிலாஷைகளையும் பங்குகளையும் தட்டிக்கேட்டால் துரோகிகளாக, இனவாதிகளாக முத்திரை குத்தப்படுகின்றோம்.
அப்பாவித் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத்தூண்டி, இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியமை பேரினவாதத் தலைவர்களினது அதிகார வெறியும் அகம்பாவங்களுமே என்பதை இந்த அரசு மீண்டும் ஞாபகத்தில் இருத்த வேண்டும்.
நம்மைப் பொருத்தளவில் இறைவனின் துணையும் நமது பிரார்த்தனைகளும் இருக்கும் வரை நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற தூய எண்ணத்தில் எதிர்காலத்தில் நமது வாக்குரிமைகளை சரியாக பயன்படுத்துவோம். இதுவே நமக்கு விமோசனம் கிடைக்க வழியேற்படுத்தும். என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் காதர் ஹாஜியாரின் மருமகனும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான அம்ஜாத், மக்கள் காங்கிரசின் கண்டி மாவட்ட அமைப்பாளராக கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாதினால் நியமிக்கப்பட்டார். கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ருப், இஷாக் ரஹ்மான், செயலாளர் சுபைதீன், பிரதித் தலைவர் ஜெமீல், அமைச்சரின் கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன் கட்சியின் முக்கியஸ்தர் றிஸ்மி, தொழிலதிபர் முஹமட் உதுமான் உட்பட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *