(சுஐப் எம் காசிம்)
வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாதெனவும் வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியல் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சிரேஷ்ட உரை பெயர்ப்பாளரும், சமூகவியல் ஆய்வாளருமான எம் எம் ராஸிக் எழுதிய “ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு” என்ற நூலின் வெளியீட்டு விழா மருதானை மாளிகாகந்தை அஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் நேேேற்று (16) மாலை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என் எம் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இராஜாங்க அமைச்சர் பௌசி பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் பேராசிரியர் ஏ ஜே ஹுஸைன் இஸ்மாயில் நூல் திறனாய்வையும் ஜம்இய்யதுல் உலமாவில் உதவிச் செயாலாளர் மௌலவி எம் எஸ் எம் தாஸிம் விஷேட உரையையும் நிகழ்த்தினர். நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில், இரவோடிரவாக எவருக்கும் தெரியாமல் வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டது. அப்போது மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப், தவறு நிகழ்ந்து விட்டது என்றார். எனினும் அன்னார் அந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகள் தொடர்பில் சில முடிவுகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். மர்ஹூம் அஷ்ரபின் எண்ணப்பாடுகள் இன்று திரிபுபடுத்தப்படுகின்றன. இன்று சில அரசியல்வாதிகள் ”அதைச் செய்தால் இதைத்தாருங்கள்” எனக் கேட்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
1200 வருடங்களுக்கு மேற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் வரலாறுகள் தொகுக்கப்பட வேண்டும், அவை பதியப்பட வேண்டும். அவ்வாறான தேவை தற்போது எழுந்திருக்கின்றது.
வரலாறுகளை ஆய்வுக்காகவும் பட்டப்படிப்புக்காகவும் எழுதிவிட்டு அவற்றை நூலகங்களிலும், ஆவணக்காப்பகங்கங்களிலும் அடுக்கி வைப்பதில் எத்தகைய பலனும் இல்லை.
முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகள் ஜனரஞ்சகப்படுத்தப்பட வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்டு ஒவ்வொருவரினதும் உள்ளங்களிலும் சென்றடைய வேண்டிய தேவைப்பாடுகள் இன்று வெகுவாக எழுந்துள்ளன.
நூலாசிரியர்களையும், ஆய்வாளர்களையும் ஊக்குவித்து அவர்களுக்கு உதவ வேண்டியது தனவந்தர்களின் கடமையாகின்றது.
இஸ்லாமிய மார்க்கத்தையும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம் உம்மத்துக்களையும் தப்பான பாதையில், தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலையை நாங்கள் இல்லாமலாக்க வேண்டும். ஒரு சிலர் விடும் தவறுகளால் எமது சமூகத்தை பிழையாகப் பார்க்கும் பார்வையை நாம் போக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது.
முஸ்லிம் சமூகம் ஆயுதம் ஏந்தாத ஒரு சமூகம். தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்ற போதும் அந்தச் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதே போன்று வடக்கிலே ஒரே மொழி பேசும் தமிழ்ச் சமூகத்திலுள்ள இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய போது நாம் உடந்தையாக இருக்கவில்லை.
இறைமையையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்த ஒரே காரணத்துக்காக வடக்கிலே முஸ்லிம்களில் ஒரு இலட்சம் பேர் விரட்டப்பட்டனர். தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கூட அவர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு இன்று நமது மனக்கண் முன்னே வந்து நிற்கின்றது.
இலங்கையிலே ஒரே ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபராக இருந்த மர்ஹூம் மக்பூல் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறு முஸ்லிம் சமூகம் கருவறுக்கப்பட்ட பல வரலாறுகள் இருக்கின்றன.
அதே போன்று சிங்கள சமூகத்தைச் சார்ந்த இனவாதிகள் எம்மைப் பற்றிய பிழையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து எமது சமூகத்தை தினமும் கொச்சைப்படுத்தி வருகின்றனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்த முஸ்லிம் சமூகம் தினமும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.
டாக்டர் டி பி ஜாயா முதல் மர்ஹூம் அஷ்ரப் வரையிலான சமூகத்தலைவர்களின் வரலாறுகள் தொகுக்கப்பட வேண்டும். இந்தப் பதிவுகளும் ஆவணங்களும் எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அண்மையில் நம்மை விட்டு மறைந்து போன மர்ஹூம் ஏ எச் எம் அஸ்வர் வரலாறுகளை மிகவும் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தவர். அது மட்டுமன்றி அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பல்வேறு கிராமங்களின் வரலாறுகளை நூலுருவாக்க உதவியவர்.
ஓய்வு பெற்ற பாராளுமன்ற சிரேஷ்ட உரை பெயர்ப்பாளர் எம் எம் ராஸிக் அமைதியானவர், சமூகம் சார்ந்த விடயங்களில் ஆழமான கருத்துக்களைக் கொண்டவர், அவரது எழுத்துப்பணி தொடர வேண்டுமென நாம் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.