Breaking
Tue. Nov 26th, 2024

வவுனியா நகரின் பலவிடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளுக்கும் சிவசேனா அமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிவசேனை வெளியிட்டதாக கூறப்பட்ட சுவரொட்டிகளை இன, மத முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை.
எந்தத் தொழில் செய்பவருக்கும் எத்தகைய வாடிக்கையாளர், பயனாளி கிடைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நோக்கம் சிவ சேனாக்குக் கிடையாது.

ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு விற்பனைக்கு வரும்முன் உற்பத்தி / விளைச்சல் நிலையிலிருந்து நுகர்வோரை அடைய முன் பல கைகள் மாறியே வருகிறது.

அந்தக் கைகளுள் எந்த இன பேதமும் இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. தரமான பொருளை, நியாயமான விலையில் வாங்க எண்ணும் நுகர்வோருக்கு சந்தைப் போட்டியே உதவும்.

இன, மத வேறுபாடுகள் சார் நிலை உதவாது. மத மாற்றத் திணிப்பை முடிந்தளவு தடுக்க வேண்டும், சைவத் தமிழ் வழிபாட்டிடங்களில் பிற சமய ஊடுருவல்களை முடிந்தளவு தடுக்க வேண்டும், சைவத்தமிழ் நலன்களைப் பேணும் கொள்கையை முன் வைக்கும் சைவத் தமிழ் வேட்பாளர்களுக்கே சைவத் தமிழர் வாக்களிக்க வேண்டும். இவையே சிவ சேனாவின் கொள்கைகள். நோக்கங்கள்.

வேறு நோக்கங்கள் சிவசேனாக்குக் கிடையாது. வவுனியாவில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சிவ சேனாவினுடையதல்ல. விஷமத்தனமான இம் முயற்சியைச் சிவசேனா அமைப்பு கண்டிக்கிறது.
இந்துக்கள் இத்தகைய முயற்சிகளுக்குக் கைகொடார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியாவின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் இந்துத் தமிழர்களே! தீபாவளியை நமது இந்துத் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டாடுங்கள்.

பிற மதக் கடைகளில் பொருட்களை பண்டிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டாடுவதைத் தவிருங்கள்.
இந்துத் தமிழ் வர்த்தகர்களே உஷாராகுங்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளின் கீழ் ‘சிவசேனா’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *