Breaking
Tue. Nov 26th, 2024

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த முரண்பாடுகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கிராம அலுவலர் தலைமையில் நேற்று மாலை நொச்சிமோட்டை கிராம அலுவலர் அலுவலகத்தில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, அப்பகுதி மதகுருமார், ஓமந்தை பொலிசார், சின்னப்புதுக்குளம் மற்றும் நொச்சிமோட்டை கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே முரண்பாடுகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெண் ஒருவருடன் கதைத்ததாக புதிய சின்னக்குளத்தை சேர்ந்த இளைஞனொருவரை சிலர் தாக்கியதில் குறித்த இளைஞர் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில் குறித்த இளைஞனை தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கையை பொலிஸார் எடுக்கவில்லை என புதிய சின்னக்குளத்தை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்டோர் கடந்த திங்கள் கிழமை நொச்சிமோட்டை பகுதிக்கு சென்று கடை ஒன்றினை அடித்து சேதப்படுத்தினர்.

இதனையடுத்து கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல் வழங்கவே, அப்பகுதியில் கூடிய புதிய சின்னக்குளத்தை சேர்ந்தவர்கள் அவ்விடத்தினை விட்டு அகன்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக சின்னப்புதுக்குளம் பகுதியைச் இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நொச்சிமோட்டைப் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்டோர் நொச்சிமோட்டை கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியதுடன், அங்கு நின்றவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மூவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் ஓமந்தை பொலிசாருக்கு முறைப்பாடு செய்தும் எவரும் கைது செய்யப்படாத நிலையில் இரு கிராமங்களுக்கும் இடையில் பதற்ற நிலை நீடித்தது.
இந் நிலையிலேயே அப்பகுதி மக்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றை இணைத்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் இரு கிராமத்தவர்களும் சண்டையில் ஈடுபடுவதில்லை எனவும், இரு கிராமங்களுக்குள் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் மதகுருமார் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாக தீர்வு காண்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், இதுவரை இரு கிராமங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்கும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கபட்டு இரு கிராமத்தவர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, இரு கிராம மக்களும் ஓமந்தை பொலிசாரின் அசமந்த போக்கே பிரச்சினைகள் சாதி அடிப்படையில் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *