தொண்டர் ஆசிரிய நியமன நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோரிடம் விளக்கம் கோரி அவசர கடிதம் ஒன்றினை நேற்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வந்தவர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தன.
இந்த நேர்முகத் தேர்வில் 1046 பேர் தோற்றியிருந்த நிலையில் 676 பேர் நியமனம் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டு, அந்த நியமனத்திற்கான மத்திய அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருந்தது.
இந்த நிலையில் வட மாகாண கல்வி அமைச்சினால் 182 பேரே தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்து அவர்களை நிரந்தர நியமனத்தில் உள்ளீர்பதற்காக பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன.
நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட தகுதிகள், ஆவணங்கள் இருந்தும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த 25 தொண்டர் ஆசியர்கள்
கடந்த 6ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாம் புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணத்தை கோரியும், தம்மையும் உள்ளீர்க்குமாறு
தெரிவித்தும் முறைப்பாடு செய்திருந்தனர்.
இம்முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் விளக்கம் கோரி வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அவசரமானது என தலைப்பிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,
வடமாகாண தொண்டர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சார்பில் இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழாகவும், மற்றும் 2005/ 17 இலக்க பொதுநிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரமும் இம் முறைப்பாடு தொடர்பில் தாங்கள் பூரணமான விசாரணை ஒன்றினை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையினை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இக் கடிதத்துடன் முறைப்பாட்டாளர்கள் 25 பேரின் பெயர் விபரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.