உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் சகல நகர்வுகளும் உரிய அமைச்சரின் கைகளிலேயே உள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாநகர, நகர , பிரதேசசபை திருத்தச்சட்டம் வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்படும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
19 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் திகதிகள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாநகர, நகர, பிரதேசபை திருத்தச்சட்ட பிரதிகளை நேற்று மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளித்திருந்தார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்த ஆணைக்குழு தலைவர் இக் கருத்தினை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் சட்டமூலத்தினை வெளிப்படுத்துவது அமைச்சரின் கடமையாகும். எமக்கு காரணிகளை தெரிந்துகொள்ளவே இன்று சட்டமூல பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வருகின்ற வாரம் செவ்வாய்க்கிழமை வெளியிடுவார் என நாம் நம்புகின்றோம். அவ்வாறு வெளியிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி எமது தேர்தல் திணைக்கள கூட்டத்தின் போது வேட்புமனு தாக்கல் தொடர்பான அறிவித்தலை எப்போது அறிவிப்பது என்பது குறித்து தீர்மானம் ஒன்றினை எடுக்க முடியும்.
வாக்காளர் பெயர் பட்டியலை நேற்றைய தினத்துடன் நாம் பூரணப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு பிரதேச சபைகளுக்குமான பெயர் பட்டியலை ஒதுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒரு வாரகாலம் தேவைப்படும். ஆகவே இந்த மாத இறுதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு வெளியிடப்படும் என நாம் நம்புகின்றோம். ஆனால் என்னால் வாக்குறுதி வழங்க முடியாது . ஆணைக்குழுவின் கூட்டத்தின் போதே நாம் தீர்மானம் எடுக்க வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியும் என நாம் நம்புகின்றோம். அதற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது என்ற ஒரு பிரச்சினை உள்ளது. பாடசாலை பரீட்சைகளை குழப்ப முடியாது. ஆகவே டிசம்பர் 21 ஆம் திகதி வரையில் எம்மால் தேர்தலை நடத்த இயலாது. விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதையே நாமும் எதிர்பார்க்கின்றோம். நாம் தேர்தலுக்கு தடையில்லை , எனினும் இப்போது தேர்தல் நடத்துவதா தள்ளிப்போடுவதா என்பதை அமைச்சரே தீர்மானிக்க வேண்டும். பந்து அவரின் கையில் உள்ளது. 17 ஆம் திகதி எம்மிடம் ஒப்படைப்பார் என நாம் நம்புகின்றோம்.
எம்முடனான சந்திப்பின் போதும் அவர் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். ஆகவே சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எனினும் நான்கு பிரதேச சபைகள் இன்னும் சிக்கலில் உள்ளன. புதுக்குடியிருப்பு மற்றும் கரைச்சி பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றே சட்டமூலத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு பெயர் பட்டியலின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் சுட்டிக்க்காட்டப்பட்டுள்ளது.
அதனை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவ் விடயத்துக்கு தீர்வு கண்ட பின்னரே அவற்றில் திருத்தங்களை கொண்டுவர முடியும். அதேபோல் நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரண்டும் பிரதேச சபைகளையும் நான்கு பிரதேச சபைகளாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இவற்றினை சரிவர செய்ய முடியுமாயின் அவற்றையும் சட்டமூலத்தில் இணைத்துக்கொண்டு செயற்பட முடியும். தேர்தல் குறித்த அறிவித்தலை 75-60 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். ஆகவே வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர் 19 ஆம் திகதி எமது திணைக்கள கூட்டத்தில் எப்போது வேட்புமனு தாக்கல் அறிவித்தல் விடுவது மற்றும் தேர்தல் வாக்கெடுப்பை எப்போது நடத்துவது என்பதை தீர்மானிக்க முடியும் என்றார்.