(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
அண்மைக் காலமாக பிரதி அமைச்சர் ஹரீசும் அமைச்சர் ஹக்கீமும் சில விடயங்களில் முரணான கருத்துக்களை பரிமாறி வருவதை அவதானிக்க முடிகிறது. இதில் வடக்கும் மற்றும் கிழக்கு இணைப்பு, மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை ஆகியவற்றை கோடிட்டு காட்டலாம். கரையோர மாவட்ட விடயத்தில் கூட பிரதி அமைச்சர் ஹரீசின் கருத்துக்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு மறைமுக சவாலாக அமைந்துள்ளது.
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தை பொறுத்தமட்டில் அமைச்சர் ஹக்கீம் அதில் முஸ்லிம்களுக்கு எந்த பாதகமுமில்லை என்ற வகையிலான கருத்துக்களையே முன் வைத்து வருகிறார். அவ்வாறு முன் வைக்கவே சிந்தித்துமிருந்தார். இருந்த போதிலும் இது தொடர்பில் மு.காவை சேர்ந்த யாருமே எந்த விதமான கருத்துக்களையும் தெரிவித்திருக்காத நிலையில் அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் ஹரீஸ் இத் திருத்தச் சட்டம் பிழையானது என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது சில பேச்சுக்கள் மு.கா அறிந்து கொண்டே தவறை செய்துவிட்டதாக கூறியிருந்தன.
இதன் பின்னர் மு.காவின் ஆதரவாளர்கள் தங்கள் கட்சி பிழை செய்துவிட்டது என்ற வகையில் உள்ளத்தில் பதிவொன்றை பதித்து கொண்டனர். இருந்த போதிலும் தங்களது கட்சியை காப்பாற்ற இதனை ஏற்றுக்கொண்டு வேறு வகையிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தனர் ( பிழையென அறிந்துகொண்டு அதனை நியாயப்படுத்துபவர்களே மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர்). இப்போது இதனை சரியென கூறுவது அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலானதாக அமைந்திருந்தது. உள்ளத்தில் பதிக்கப்படும் முதல் பதிவு மிக முக்கியமானது.
தற்போது அமைச்சர் ஹக்கீம் அதனை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்து வருகின்ற போதும் யாருமே அவரது நியாயத்தை கவனத்தில் கொள்ளாமை மக்கள் இவரது நியாயத்தை நோக்கும் நிலையில் இல்லை என்பதை எடுத்து காட்டுகிறது. இல்லாவிட்டால் விமர்சன மழைகள் பொழிந்திருக்கும். அமைச்சர் ஹக்கீம் என்றால் இப்படித் தான் என்ற விம்பம் மக்கள் மனதில் தெளிவாக பதிந்துவிட்டது. இவரது நியாயம் எடுப்படாமல் போக பிரதி அமைச்சர் ஹரீசின் கூற்றுக்கள் பெரும் பாங்காற்றியிருந்தன. இதனை மாற்றுக்கட்சியினர் பிழையென கூறுவது அரசியல் இலாபம் கொண்டதெனலாம். மு.காவின் பிரதி தலைவரர் கூறுவதை அவ்வாறு எடுக்க முடியாதல்லவா?
பிரதி அமைச்சர் ஹரீசின் கூற்றுக்கள் அமைச்சர் ஹக்கீமை சவாலுக்குட்படுதியுள்ளது. அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலாக அமைந்தால் அடுத்தது என்ன நடக்கும் என்பது யாவரும் அறிந்ததே. இவரும் மு.காவின் துரோகி முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்படலாம்.