பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக் கும் வகையில் புதிய சட்டத்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் தொழில்முறை சிப்பாய்களும், மற்ற இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத் தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இராணுவ வீரர்கள் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இதர அம்சங்கள் எதிரிக்கு விவரங்களை அளிக்கக்கூடும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக இராணுவ வீரர்கள் ஓரிடத்தில் இருந்து கொண்டு பதிவுகள் இடும்போது, அந்த பதிவுகள் எங்கிருந்து பதிவிடப்பட்டன என்பதை மற்றவர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாக உள்ளது. இந்த காரணங்களால் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ரஷ்ய வீரர்களால் பதிவேற்றப்பட்டுள்ள சமூக ஊடக பதிவுகள் உக்ரைன் மற்றும் சிரியாவில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ள தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்த சட்டம் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன