வவுனியா கணேசபுரத்திலுள்ள பால் சபையில் பால் கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ளதால் இன்று, பால் உற்பத்தியாளர்கள் தமது பாலை கொள்வனவு செய்யுமாறு கோரி பால் சபைக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா கணேசபுரம் பகுதியிலுள்ள பால் கொள்வனவு நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக பாலினை கொள்வனவு செய்யவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பாலினை கொள்வனவு செய்து வந்தவர்கள் திடீரென பாலில் தரம் இல்லை என்ற காரணத்தை கூறி பாலினை கொள்வனவு செய்யாது விடுகின்றார்கள்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்களுக்கு ஓர் முடிவு கிடைக்கும் வரை பாற்சபையை திறக்க சம்மதிக்க மாட்டோம். அதுவரை யாரிடமும் பால் கொள்வனவு செய்ய முடியாது. அதனை கண்டித்தே நாம் இவ் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பிராந்திய பால் சபை முகாமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
பாலின் தரம் குறைந்துள்ளதால் தமது நிறுவனங்களின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப தற்போது பால் கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ளது.
பாலின் தரத்தினை வைத்தே பால்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாலினை சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் பருகிவருகின்றனர். இந்நிலையில் தரத்தின் தன்மை குறைந்து காணப்படும் பாலினையே நாங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பாலினை எடுத்து வந்த உற்பத்தியாளர்கள் பல கிராமங்களிலிருந்து பாலினைக் கொண்டு வந்துள்ளனர். பல ஆண்டுகளாகவே இங்கு பாலினை கொடுத்து வருகின்றோம்.
திடீரென்று பால் கொள்வனவை நிறுத்தியுள்ளதால் நாம் என்ன செய்வது எமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதையே நாங்கள் நம்பியுள்ளோம்.
இந்நிலையில் எமது ஊருக்குள் கடந்த காலங்களில் முகவர்கள் மூலம் 55 ரூபாவிற்கு பாலினை கொள்வனவு செய்திருந்தனர்.
தற்போது நாங்கள் நேரடியாக பால் சபையில் கொடுக்கும்போது 63 ரூபாவிற்கு கொள்முதல் செய்துள்ளனர். இதனால் எமது தொழிலினை மேற்கொள்வதற்கு இசைவான நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பால் சபை நிலையத்திற்கு நெளுக்குளம் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏ. அத்தநாயக்க சென்று உற்பத்தியாளருடனும் பிராந்திய பால் சபை முகாமையாளருடனும் கலந்துரையாடியதில் பால் கொள்வனவை நாங்கள் தடுக்கவில்லை என்று தெரிவித்ததுடன் வழமையான வாடிக்கையாளர்களிடமிருந்து பால்கொள்வனவு இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாலினை கொள்வனவு செய்ய மறுக்கப்பட்டவர்கள் மதவாச்சியிலுள்ள பால் கொள்வனவு நிறுவனத்திற்கு தமது பாலினைக் கொடுப்பதாக தீர்மானித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.