Breaking
Mon. Nov 25th, 2024

(சஜ்றி)

முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்காக குரல் கொடுக்க வந்த முஸ்லிம் தலைமைகள், மாகாண சபைகள் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்து வரலாற்றுத் துரோகம் இழைத்துள்ளனர். இன்று எந்த தலைமைகளை நம்புவதென்ற விரக்தியில் சகல நம்பிக்கைகளையும் இழந்து முஸ்லிம்கள் நட்டாற்றில் கைவிடப்பட்டு வலிந்து மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களை தற்கொலைக்குத் தள்ளும் இந்த தவறை செய்தது யார்?

என்ற கௌரவப் போராட்டம், இப்போது முஸ்லிம் காங்கிரஸுக்கும், மக்கள் காங்கிரஸுக்கும் இடையில் வெடித்துள்ளது.

அதிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட், பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோரின் தர்க்கங்களிலிருந்து இதை உணர முடிந்தது. சமூகத்தின் தலைமைப் பதவிக்கான கழுத்தறுப்பு, காலைவாரும் போட்டிகள் வாக்கெடுப்பின் இறுதித் தருணத்தில் இடம்பெற்றமை. இவர்களின் விவாதங்களில் வெளிச்சத்துக்கு வந்தன.

இந்த கழுத்தறுப்பு, காலைவாருதலில் இரட்டிப்பு இலாபமடைந்தது முஸ்லிம் காங்கிரசே பிரதமருக்குத் தனது நீண்டகால விசுவாசத்தை வெளிப்படுத்தியமை, சமூகத்தை பலிக்கடாக்களாக்கிய பாவத்தையும், பழியையும் தான் மட்டும் சுமக்காமல், மக்கள் காங்கிரஸையும் சுமக்க வைத்தமையும், தந்திரமான காய் நகர்த்தல்களே. மாகாண சபைகள் திருத்த சட்டமூலத்துக்கு மக்கள் காங்கிரஸ் வாக்களித்தால் தாங்களும் வாக்களிப்போம் என்றும், அமைச்சர் ரிஷாட் இந்த சட்டமூலத்துக்கு வாக்களிப்பதில்லை என்பதில் விடாப்பிடியாகவுள்ளதாகவும், பிரதமருடனான இரகசிய சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் தளராத நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் காட்டிக்கொடுத்தது. இதனால் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளிலிருந்து மக்கள் காங்கிரஸ் தனிமைப்படும் அபாயகரமான சூழல் ஏற்படுத்தப்பட்டது. தானிழந்த மவுஸையும், கௌரவத்தையும் மீளக்கைப்பற்றுவதற்கான கடைசி சந்தர்ப்பத்தையும், காட்டிக்கொடுப்பையும்,முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்திய விதம் பாராட்டுக்குரியதே.

பிரதமர், ஜனாதிபதியின் நம்பிக்கையிலிருந்து மக்கள் காங்கிரஸை தூரப்படுத்தி, இனவாதிகளின் எரிச்சலுக்கும், சந்தேகத்துக்கும் தூபமிட்டால் மக்கள் காங்கிரஸின் செல்வாக்குகள் வீழ்ச்சியுறும் என்று சில தலைமைகள் தப்புக்கணக்கு போடுகின்றன. இந்த தப்புக்கணக்கிலிருந்து தப்பிக்கவே மக்கள் காங்கிரஸ் வக்களித்துள்ளதோ தெரியாது.

ஏற்கனவே இனவாதிகளின் கழுகுப் பார்வைக்கும், அழுங்குப்பிடிக்குமுள்ளாகியுள்ள, மக்கள் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற காட்டிக்கொடுப்பை கவனமாகக் கையாண்டு “தக்கெனப் பிழைத்தல்” தத்துவத்தில் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கி கையை உயர்த்தினாலும், இது தவறென உணர்ந்து தலைதாழ்த்தி மனம் வருந்துகிறது. தவறு செய்தவன் மனம் வருந்துவதும், தவறை ஏற்றுக்கொள்வதும் ஒப்பீட்டளவில் பெருந்தன்மையே.

இந்த பெருந்தன்மை வருங்காலத்தில் தவறிழைக்காமல் சில தலைவர்களை நெறிப்படுத்தும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தான்பிடித்த முயலுக்கு மூன்று காலென பிடிவாதத்துடனும், அகங்காரத்துடனும் உள்ளது. அகங்காரமும், பிடிவாதமும் அழிவுக்கு இட்டுச் சென்ற வரலாறுகள் அதிகமுண்டு. இனி என்ன செய்வது அமிழ்ந்து கொண்டிருக்கும். முஸ்லிம்களை கரையேற்ற இரு தலைமகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இது நட்டாற்றில் கைவிடப்பட்டு மூழ்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களின் அவலக்குரலாகும்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *