உலகின் அதிக எடை கொண்ட பெண் மரணமானார். 37 வயதாகும் இவரது உடல் எடையைக் குறைக்க இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது தெரிந்ததே!
எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமட் அப்த் எல் ஆட்டி என்ற இந்தப் பெண் அரை தொன் – அதாவது 500 கிலோ – எடை கொண்டவராக இருந்தார்.
அதீத உடல் எடையால் கட்டிலை விட்டு நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால், இவரது உடல் எடை மேலும் அதிகரித்தே வந்தது.
இந்த நிலையில்தான் அவருக்கு உடல் எடை குறைப்பு சத்திர சிகிச்சை செய்து எடையைக் குறைக்க முடியும் என மும்பையின் மருத்துவர் ஒருவர் அறிவித்தார்.
அதன்படி இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்று இமானின் சகோதரி குற்றம் சாட்டியதையடுத்து இமான் மீண்டும் திருப்பியனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், தீவிர இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களால் தாக்கப்பட்ட இமான் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
மும்பையில் அளிக்கப்பட்ட முதற்கட்ட சிகிச்சையால் சுமார் 300 கிலோ வரை உடல் எடை குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.